வாழ்நாள் கல்வி

இலாபகரமான பால்பண்ணைக்கான இனப்பெருக்க மேலாண்மை

இலாபகரமான பால்பண்ணைக்கான இனப்பெருக்க மேலாண்மை

இலாபகரமான பால்பண்ணைக்கான இனப்பெருக்க மேலாண்மை

Facebook twitter googleplus pinterest LinkedIn


இலாபகரமான பால்பண்ணைக்கான இனப்பெருக்க மேலாண்மை முன்னுரை

கறவைமாடு வளர்ப்பை இலாபகரமானதாகவும், பண்ணையில் கறவை மாடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க 'வருடம் ஒரு கன்று' என்ற மந்திர வார்த்தையை நடைமுறையில் கொண்டுவர வேண்டும்.  அதற்காக பண்ணையில் கறவை மாடுகளை இனப்பெருக்கம் செய்யவேண்டும்.  இந்தப் பாடத்திட்டத்தில் இனப்பெருக்க மேலாண்மை குறித்துப் பார்க்கலாம்.

 

இனப்பெருக்கத்தைத் தடுக்கும் காரணிகள்

1.            கன்று ஈன்ற மாடுகள் சினை தருணத்திற்கு  வராமல் இருத்தல். 

2.            சினைத் தருணத்திற்கு வந்தாலும் வெளிப்புற அறிகுறிகளைக் வெளிப்படுத்தாமல் இருத்தல்.

3.            சினைத் தங்காமை

4.            கருவுற்ற சில நாட்களிலேயே கரு இறப்பு ஆகியவைகளால் வருடம் ஒரு கன்று என்பது தடைபடுகிறது.

 

வெப்ப அயற்சி

கலப்பின மாடுகளில் வெப்ப அயற்சி மற்றும் சத்து பற்றாக்குறைதான் பெரும்பாலும் காரணமாக இருக்கிறது.  ஆகவே கொட்டகையில் வெப்ப அயற்சியை போக்கும் வகையில் கொட்டமையை குளிர்ச்சியாக பராமரிக்கும் தொழில் நுட்பங்களை கடைபிடிக்கவேண்டும்.  உதாரணமாக கோடைக் காலங்களில் கொட்டகை தகரமாக இருந்தால் மேல் பகுதியில் தென்னை ஓலைகளை பரப்பி வைக்கவேண்டும்.  மாடுகளின் உடம்பில் நீர்த் தெளித்தல் போன்ற செயல்களின் மூலம் வெப்ப அயற்சியைக் குறைக்கலாம்.

 

தீவனம் - தாது உப்புகள் கொடுத்தல்

கறவை மாடுகளுக்கு கொடுக்கும் தீவனம் சமச்சீரானதாகவும், தாது உப்பு கலவையையும் சேர்த்துக் கொடுக்கும்போது இனப்பெருக்க பிரச்சனை குறையும்.  மாடுகள் சினைப்பிடிப்பதற்கு  தாதுஉப்பு கலவை மிக மிக அவசியம்.  தினசரி மாடுகளுக்கு தீவனத்தில் 30 கிராம் முதல் 40 கிராம் வரை தாது உப்புக் கலவையும், 25 முதல் 30 கிராம் அளவிலான சமையல் உப்பும் சேர்த்துக் கொடுக்கவேண்டும்.  தாது உப்புக் கலவை கீழ்க்காணும் வகைகள் இருக்கவேண்டும்.  கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்பு போன்ற தாது உப்புகள், தாமிரம், கோபால்ட், மாங்கனீசு, கந்தகம், செலினியம், குரோமியம் போன்ற தாது உப்புகள் கட்டாயம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

 

பருவத்தில் சினை ஊசி

சினைப் பருவத்தில் உள்ள கறவை மாடுகளின் சினை அறிகுறிகளை கண்காணித்து சரியான சினை தருணத்தில் செயற்கை முறை கருவூட்டல் மூலம் கருவுறச் செய்தல் சிறந்தது மட்டுமில்லாமல் பாதுகாப்பானதுமாகும்.

 

நாளமில்லா சுரப்பி நீர்

கன்று ஈன்ற பின் அதிகமான பால் உற்பத்தி நிலையில் உள்ள மாடுகளை பருவத்திற்கு வரச் செய்ய தகுந்த நாளமில்லாச் சுரப்பி நீர் மருந்துகளை பயன்படுத்தி மாடுகளை பருவத்திற்கு வரச் செய்து செயற்கை கருவூட்டல் மூலம் கருவுறச் செய்யலாம்.  நாளமில்லா சுரப்பி நீர் (புரோஜெஸ்டிரான்) குறைவால் ஏற்படும் கருத்தங்காமை பிரச்சனையை சரி செய்ய கருவூட்டலின் போது மாட்டிற்கு நாளமில்லா சுரப்பிக் கொடுத்து கருவுறச் செய்யலாம்.

 

சினைக் காலத் தீவனம்

கறவையிலிருக்கும் மாடுகள் ஏழு மாத சினை ஆனதும் பால் கறப்பதை சரியான முறைப்படி நிறுத்திவிட வேண்டும்.  அதன்பின் சினை மாட்டிற்கு தேவையான சரிவிகிதத் தீவனங்கள் கொடுப்பதன் மூலம் வயிற்றில் வளரும் கன்றுக்குட்டி சரியான எடை பெற்று வளரும்.  அந்தக் கறவையில் பால் உற்பத்தித் திறனும் அதிகரிக்கும்.  கன்று ஈன்ற பிறகு வரக்கூடிய கருப்பை வெளித் தள்ளுதல், நஞ்சுக்கொடி உள்ளே தங்குதல், கால்சியம் பற்றாக்குறை நோய், மாவுச் சத்துப் பற்றாக்குறை நோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தகுந்த பராமரிப்பின் மூலம் தடுக்கலாம்.

 

பருவ சுழற்சியை ஒருங்கிணைத்தல்

அதிக கறவை மாடுகளை பராமரிக்கும் பண்ணைகளில் பருவ சுழற்சியை ஒருங்கிணைத்தல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கறவை மாடுகளை சிறுசிறு குழுக்களாக கன்று ஈனுமாறு செய்வதன் மூலம் பண்ணையில் ஒரு நிரந்தர வருமானம் கிடைக்குமாறு செய்யலாம்.

 

சுகாதார பராமரிப்பு

நோய்கள் மற்றும் அக புற ஒட்டுண்ணிகளின் தாக்கத்தாலும், இனப்பெருக்கத் திறன் குறைவு மூலம் பால்பண்ணை நடத்துபவர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்படக்கூடும்.  சரியான காலங்களில் அடைப்பான், கோமாரி போன்ற தொற்று நோய்களுக்கு தடுப்பூசிப் போட்டு மாடுகளை வளர்க்கலாம்.  சுகாதாரமான பராமரிப்பும் அவசியம்.  நோய்கண்ட மாடுகளுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதன் மூலம் இழப்பை தடுக்கலாம்.  குடற்புழு நீக்க மருந்துகளை சுழற்சி முறையில் கொடுக்கவேண்டும்.  கன்று ஈனுவதற்கு 10 நாட்களுக்கு முன் அல்லது கன்று ஈன்ற 10 நாட்களுக்கு பின் கறவை மாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துக் கொடுக்கவேண்டும்.  புற ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த தகுந்த மருந்துகளைக்  கொண்டு மருந்துக் குளியல் செய்தல் மற்றும் கொட்டகைக்குள் மருந்துகளை சரியான முறையில் தெளிப்பதன் மூலம் மாடுகளை ஆரோக்கியமாக வளர்க்கலாம்.

 

பதிவேடுகள் பராமரிப்பு

கறவை மாடுகள் பண்ணையில் முறையான பதிவேடுகள் பராமரிக்கப்பட வேண்டும்.  இதில் இனப்பெருக்கப் பதிவேடு முக்கியமானதாகும். இதில்; மாடுகளுக்கு சினை ஊசி போட்ட நாள், கருத்தரிப்பு உறுதி செய்யப்பட்ட நாள், உத்தேசமாக கன்று ஈனும் நாள் ஆகியவற்றை குறித்து வைக்கவேண்டும்.  தடுப்பூசி போட்ட நாள், அடுத்த தடுப்பூசி போடவேண்டிய நாள் அனைத்தையும் குறித்து வைக்கவேண்டும்.  பண்ணையில் கன்று பிறப்ப பதிவேடு, இழப்பு பதிவேடு, தீவனப் பதிவேடு, குடற்புழு நீக்கம், தடுப்பூசி மற்றும்; காப்பீடு செய்த பதிவேடு, இழப்பீடு பெற்ற விபர பதிவேடு என அனைத்து வகைiயான பதிவேடுகளையும் பராமரிப்பதின் மூலம் மாடுகளின் இனப்பெருக்கத்தை வெற்றிகரமாக செல்லலாம்.

 

இலாபகரமான பால்பண்ணைக்கான இனப்பெருக்க மேலாண்மை முடிவுரை

மேற்கூறிய வழிமுறைகளை கையாண்டு கறவைமாடுப் பண்ணை வைத்திருப்பவர்கள் இனப் பெருக்க தொழில் நுட்பங்களை மற்றும் இனப்பெருக்க மேலாண்மை மூலம் வருடம் ஒரு கன்று உற்பத்தி செய்து பண்ணையின் வருமானம் குறையாமல் பார்த்துக் கொள்ளலாம்