வாழ்நாள் கல்வி

வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியை கூட்டும் நவீன யுக்திகள்

வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியை கூட்டும் நவீன யுக்திகள்

வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியை கூட்டும் நவீன யுக்திகள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியை கூட்டும் நவீன யுக்திகள் முன்னுரை

எந்த தொழில் செய்தாலும் தொழிலில் இலாபம் பெறவேண்டும் என்றுதான் தொழில் செய்பவர்கள் எண்ணுவார்கள். வெள்ளாடு வளர்ப்பு என்பது ஒரு சுய தொழில். இந்தத் தொழில் செய்பவர்களும் உற்பத்தியைக் கூட்ட நவீன யுக்திகளை பின்பற்றுவார்கள். இந்த பாடத்திட்டத்தில் வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியைக் கூட்டும் நவீன யுக்திகள் பற்றி பார்போம்.

 

வெள்ளாடு வளர்ப்பு ஒரு இலாபகாரமான சுயதொழில்

வெள்ளாடு வளர்க்க குறைந்த அளவு இடமும், முதலீடும் இருந்தால் போதும்.  இது ஆடுகள் மற்ற கால்நடைகள் தின்னாத இலை, செடி, கொடிகளை அனைத்தையம் உண்டு வளரும்.  வெள்ளாடுகள் அதிக வெப்பத்தையும், வறட்சியான சூழ்நிலையையும் தாங்கி வளரும் குணநலன்களை கொண்டது.  வெள்ளாட்டின் கிடா மற்றும் பெட்டையாடுகளுக்கு என்றும் சந்தை தேவை உள்ளது.  வெள்ளாட்டு சாணம், சிறுநீர் மண்ணுக்கு நல்ல உரமாகும்.  வெள்ளாட்டின் பால், இறைச்சி, தோல் ஆகியவைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது.

 

சினைப்பருவ மேலாண்மை

வெள்ளாடு இரண்டு வருடத்தில் மூன்று தடவை குட்டி போடும் கன்னி ஆடுகள் ஒரு ஈற்றில் இரண்டு முதல் மூன்று குட்டிகளை ஈனும். 12 மாத வயதுள்ள பெட்டைகளை இனவிருத்திக்கு பயன்படுத்தலாம். ஆடுகள் சினையை உறுதி செய்தவுடன் மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகள் மற்றும் கொட்டில் முறை ஆடுகளுக்கு பசுந்தீவனம், உலர்தீவனம், அடர்தீவனம் என கொடுத்து வளர்க்க வேண்டும். இனப்பெருக்க காலத்தில் பெட்டை ஆடுகளுக்கு தினமும் 250 முதல் 300 கிராம் வரை அடர்தீவனமும் காய்ந்த பயறுவகை தீவனமும் கொடுத்தால் அதிகமான கருமுட்டைகள் உருவாகி கூடுதல் குட்கள் ஈனும். சினை பருவ அறிகுறிகள் தென்பட்ட 24 மணி நேரத்துக்குள் கிடாவோடு சேர்க்க வேண்டும்.

 

தீவன மேலாண்மை:

வெள்ளாடுகள் மேய்ச்சலுடன் மர இலை தீவனங்களை விரும்பி தின்னும். மர இலைகளில் ஆடுகளுக்குத் தேவையான சத்துகள் அதிகம் உள்ளன. சினை ஆடுகளுக்கு குட்டி ஈனுவதற்கு 30-45 நாட்களில் கொடுக்கும் தீவனம் குட்டிகளின் வளர்ச்சியை துரிதப்படுத்தும்.  தாய் ஆட்டின் பால் உற்பத்திக்கும் உதவும்.  கருவேலம், வாகை, சூபாபுல், அகத்தி, சீமை, புங்கன், அரசமரம், ஆலமரம், வேப்பமரம், கல்யாண முருங்கை போன்ற மர இலைகளில் வைட்டமின் எ உயிர்சத்து, சுண்ணாம்புசத்து அதிகம் இருப்பதால் குட்டிகள் மற்றும் ஆடுகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும்.

புல்வகை தீவனங்களில் கம்பு நேப்பியர் நல்ல சத்துக்கள் நிறைந்தது.  பயறு வகை தீவனங்களை தட்டைப்பயறு பொட்டு, உளுந்தம்பொட்டு, கடலைக்கொடி ஆகியவற்றையும் கொடுக்கலாம்.  ஆடுகளுக்கான அடர்தீவனத்தை குறைந்த விலையில் கிடைக்கும். மூலப்பொருட்களை கொண்டு பண்ணையிலேயே தயாரித்துக் கொடுத்தால் செலவுக் குறையும்.

 

தாது உப்புகள்

வெள்ளாட்டின் பாலில் சோடியம் குளோரைடு உப்பு அதிகமாக இருப்பதால் ஆடுகளுக்கு உப்பின் தேவை அதிகமாக இருக்கும்.  இந்த உப்புத் தேவை ஈடு செய்ய அடர்தீவனத்தில் உப்பை சேர்த்து கொடுக்கவேண்டும்.  குட்டிகளின் வளர்ச்சி, சினைப்பருவத்திற்கு வருதல், கருமுட்டை வளர்ச்சி இனப்பெருக்கம் என எல்லா நிலைகளுக்கும் தாது உப்பின் தேவை உள்ளதால் கொட்டகையில் தாது உப்புக் கட்டிகளை கட்டி தொங்கவிட வேண்டும்.

 

நோய் மேலாண்மை

ஆடுகள் நோய் தாக்கம் இல்லாமல் இருந்தால்தான் தின்னும் தீவனம் ஜீரணமாகி உடல் வளர்ச்சி இருக்கும்.  இதற்கு ஆடுகளுக்கு முதல் இளம் குட்டி முதல் பெரிய ஆடுகள் வரை குடற்புழு நீக்கம் செய்யவேண்டும்.  மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்தை மாற்றி மாற்றி கொடுக்கவேண்டும்.  அது போல கோடைக்காலம் துவங்கும் முன் கோமாரி, ஆட்டம்மை, பிபிஆர் என்னும் ஆட்டுக்கொல்லி நோய் மடிவீக்கம் ஆகியவைகளுக்கு தடுப்பூசி போடவேண்டும்.  இந்த நோய்களுக்கு மூலிகை மருந்துகளையும் கொடுக்கலாம்.  மழைக்காலம் தொடங்குவதற்கு முன் அடைப்பான், தொண்டை அடைப்பான் போன்ற நுண்ணுயிரி, நச்சுயிரி நோய்களுக்கு தடுப்பூசி போடவேண்டும்.  சித்த மருத்துவ முறைகளை பின்பற்றி மசால் உருண்டை தயாரித்து கொடுத்தால் ஆடுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.

 

சந்தை வாய்ப்பு

வெள்ளாட்டு இறைச்சி எல்லா வயதினரும் எல்லா மதத்தினரும் விரும்பி உண்பதால், சந்தை வாய்ப்பு என்றும் பிரகாசமாக உள்ளது.  இதோடு வெள்ளாட்டுப் பால் சர்க்கரை, ஆஸ்துமா, மூட்டுவலி போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாக உள்ளது.  இதோடு தோல், எலும்புகள், கால்குளம்புகள், குடல், மண்ணீரல் போன்றவை நவீன மருத்துவத்தைப் பயன்படுத்தப்படுவதால் நல்ல சந்தை வாய்ப்பு உள்ளது.  நல்ல தரமான திடகாத்திரமான ஆடுகளுக்கு வெளிநாட்டு ஏற்றுமதிக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

 

விற்பனை

வெள்ளாடுகளில் இனப் பெருக்கத்திற்கு பயன்படாத பெட்டை ஆடுகள், பொலிக் கிடாவை தவிர மற்ற கிடாக்கள் வயதான ஆடுகள், நோய்வாய்ப்பட்ட ஆடுகள் போன்றவற்றை அவ்வப்போது கழித்து விற்று வந்தால் பண்ணையில் ஆடுகளின் எண்ணிக்கை ஒரே சீராக இருக்கும்.  வளர்ப்பவருக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

 

நிதி உதவிகள்

வெள்ளாடு வளர்ப்புக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் உதவி அளிக்கப்படுகிறது.  ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 100 பெட்டை ஆடுகள், நான்கு கிடா கொட்டகை அமைத்தல், தீவனச் செலவு என எல்லாம் சேர்ந்து 12 இலட்சம் வரை கடன் கொடுக்கிறது.  நபார்டு வங்கியும் ஆடு வளர்ப்புக்கு கடன் கொடுத்து உதவுகிறது. 

 

வெள்ளாடு வளர்ப்பில் உற்பத்தியை கூட்டும் நவீன யுக்திகள் முடிவுரை

வெள்ளாடு வளர்ப்பில் இந்த பாடத்திட்டத்தில் கூறியுள்ளவாறு வழிமுறைகளை பின்பற்றி ஆடுகளை வளர்த்தால், ஆட்டுப் பண்ணையில் ஆடுகளின் எண்ணிக்கை உயரும்.  நல்ல இலாபமும் கிடைக்கும்.