வாழ்நாள் கல்வி

வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்

வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்

வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள்

Facebook twitter googleplus pinterest LinkedIn


வெள்ளாடு வளர்ப்பிற்கான முன்னுரை

சிறு தொழிலா, பெரு தொழிலா

பணம் கொடுக்க பல தொழிலுண்டு

சிறப்பான தொழில் தொடங்க

வெள்ளாடு வளர்ப்பும் ஒரு தொழிலே!

எந்த ஒரு தொழில் செய்தாலும் அது பயன் உள்ளதாக இருக்கவேண்டும்.  பருவ மழை தவறி விவசாயம் பொய்த்து வரும் காலச் சூழலில் நிலமில்லா ஏழை, எளிய மக்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக இருப்பது வெள்ளாடு வளர்ப்பு தொழில்.  'ஐந்து கானி நிலமும் சரி, ஐம்பது வெள்ளாடும் சரி'. இது பழமொழி.  பூமியில் விளையும் அனைத்து வகையான தாவரங்களையும் உட்கொண்டு, வளர்ப்பவர்களுக்கு நல்ல இலாபத்தை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளாடு. இது ஒரு நடமாடும் ATM என்றும் அழைக்கப்படுகிறது. வெள்ளாடு வளர்ப்பின் பயன்கள் பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் காண்போம்.

 

வெள்ளாடு வளர்ப்பு இலாபகரமான சுயதொழில்

வெள்ளாடு வளர்ப்பு ஒரு சுயமாக, கௌரவமாக, இலாபகரமாக செய்யும் தொழிலாகும். இந்தத் தொழிலுக்கு குறைந்த முதலீடும், குறைந்த அளவு இடமும் இருந்தால் போதுமானது. வெள்ளாடுகள் பிற கால்நடைகளை விட அதிக வெப்பத்தையும் வறட்சியான சூழ்நிலைகளையும் தாங்கி வளரும் தன்மை உடையது. ஒரு ஆடு இரண்டு வருடங்களில் மூன்று முறை ஒன்றுக்கு மேற்பட்ட குட்டிகளை ஈனுவதால் பண்ணையில் ஆடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால் வெள்ளாடுகளை வளர்த்து இலாபம் அடையலாம். 

 

வெள்ளாடு வளர்ப்பின் மூலம் கிடைக்கும் நன்மைகள்

வெள்ளாடு தேவையில்லாத இலை, தழை, விவசாயக் கழிவுகளை உட்கொள்வதால் சூற்று சூழல் சமநிலைபடுத்தப்படுகிறது. வெள்ளாட்டின் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாக உள்ளது. வெள்ளாட்டு இறைச்சி, தோல் பால், எலும்புகள், குளம்புகள், கொம்புகள் மற்றும் சிறு நீர், சாணம், ரோமம் என அனைத்தும் பயனுள்ளவைகளாக உள்ளது.  வளர்ப்பவர்களுக்கு நல்ல  வருமானமும் கிடைக்கிறது.

இறைச்சி : வெள்ளாட்டு இறைச்சியில் கொழுப்புத் துகள்கள் குறைவாக உள்ளன.  ஆகையால் எல்லா வயதினருக்கும் ஏற்ற உணவாக உள்ளது.  எல்லா மதத்தை சார்ந்தவர்களும் விரும்பி உண்பதால் இதற்கான தேவை என்றும் குறையாமல் இருக்கும்.

தோல் : வெள்ளாட்டின் தோல் மிக மிருதுவாக இருக்கும்.  தோலிலிருந்து மேலாடை, அங்கிகள், தரமான காலணிகள், கையுறைகள், பணப்பைகள், மகளிர் கைப்பைகள், இடுப்புப் பட்டைகள், தொப்பிகள், இசைக்கருவிகள் மற்றும் விளையாட்டு பொருட்கள் தயாரிக்கப் பயன்படுகிறது.  ஆகையால் உலக சந்தையில் வெள்ளாட்டு தோலுக்கான தேவை என்றும் குறையாமல் உள்ளது.

உரோமம் : உரோமங்களிலிருந்து கம்பளங்கள், சால்வைகள், நீதிபதியின் குல்லாக்கள் ஆகியவை செய்யப் பயன்படுகிறது. 

சாணம்: வெள்ளாட்டின் சாணம் ஒரு இயற்கை உரமாகும். இதில் பயிர் வளர்ச்சிக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் தாது உப்புகள் போன்ற நுண்சத்துகள் அதிகம் உள்ளது. இது எளிதில் மண்ணில் மக்கி போவதால் நல்ல உரமாக அமைகிறது. இயற்கை விவசாயம் செய்யும் மக்களுக்கு இது வரபிரசாதமாகும் ஆகவே வெள்ளாட்டு சாணத்தின் தேவை கூடிக்கொண்டே வருகிறது.

பால்: வெள்ளாட்டு பாலில் பசும் பாலை விட கொழுப்பு துகள்கள் குறைவாக இருப்பதால் அனைத்து வயதினருக்கும் ஏற்ற ஒரு ஊட்டச்சத்து மிகுந்த உணவாகும். மேலும் இப்பாலில் ஒமேஹா கொழுப்பும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளதால் நோயாளிகள் மற்றும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது.  ஆட்டுப்பால் வயிற்றுப்போக்கு மற்றும் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் சிறந்த நிவாரணி ஆகும்.

இரத்தம் : இரத்தம் உணவாக பயன்படுகிறது.  இரத்தத்தை துகள்களாக மாற்றி கால்நடைகளுக்கும், கோழிகளுக்கும் தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.  இரத்த சோகை நோய்க்கு சிறந்த மருந்தாகும்.  இதிலிருந்து பிரித்து எடுக்கப்படும் ஆல்புமின் பசையாகவும், ஆடைத் தயாரிப்பு தொழிலிலும் பயன்படுகிறது. 

எலும்பு : எலும்பிலிருந்து விலை மதிப்பில்லா பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.  கேக், ஜெல்லி போன்ற உணவுப் பொருட்கள் தயாரிக்கவும், போட்டோ தொழிலுக்கும் பயன்படுகிறது.  கால்நடை மற்றும் கோழி தீவனங்கள் தயாரிக்கவும் பயன்படுகிறது.

உள்ளுறுப்புகள் : குடல், கல்லீரல், கணையம், பித்தப்பை, நுரையீரல், கொழுப்பு ஆகியவைகளிலிருந்து அறுவை சிகிச்சைக்கு பயன்படும் நூல், நீரிழிவு நோய்க்கான இன்சுலின், மனிதனுடைய நோய்களைத் தீர்க்கும் மருந்துகள் ஆகியவை தயாரிக்கப் பயன்படுகிறது.  வெள்ளாட்டுக் கொழுப்பு இயந்திரங்களுக்கான உயவுப் பொருளாகவும், கிருமி நாசினிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகள் தயாரிக்கவும்; பயன்படுகிறது.

சிறுநீர் : வெள்ளாடுகள் பல வகையான இலை, தழைகளை உண்பதால்  இதன் சிறுநீர் தாவரங்களின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து வகையான நுண்ணுட்டச் சத்துக்களான போரான், மெக்னீசியம், கோபால்ட், தாமிரம், துத்தநாகம் மற்றும் மாலிப்டினம் ஆகியவைகளைக் கொண்டதாக உள்ளது. அது போக நவீன மருத்துவத்தில் ஆட்டு சிறு நீரில் இருந்து பல மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. அதனால் இதன் தேவை நாளுக்குநாள் கூடிக் கொண்டே வருகிறது.

கொம்பு மற்றும் குளம்புகள் :  கொம்பிலிருந்து நவீன கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.  குளம்பிலிருந்து புண்களை ஆற்றுவதற்கான களிம்புகள் தயாரிக்கப்படுகிறது.

 

வெள்ளாடு வளர்ப்பிற்கான முடிவுரை

வெள்ளாடு ஒரு பண்ணைப் பொருள் மட்டுமல்ல.  பல தொழில்களுக்கான மூலப்பொருளாகவும் விளங்குகிறது.  அதிகப்படியான வருமானம் ஈட்டக்கூடிய மென்பொருள் பொறியாளர்கள் கூட இன்று வெள்ளாடு வளர்ப்பில் ஈடுபடும் நிலை ஏற்பட்டு வருகிறது.  ஆர்வமும், கவனமும் இருந்தால் இன்றைய ஆட்டுப் பண்ணையாளர்கள் நாளைய தொழிலதிபர்களாக மாறவும் வாய்ப்பு உள்ளது.  இருக்கும்போதும், இறந்தபோதும் வளம் பல கொடுக்கும் வெள்ளாடு ஒரு வாழைமரம் ஆகும்