வாழ்நாள் கல்வி

கால்நடைகளில் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்

கால்நடைகளில் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்

கால்நடைகளில் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகளும், கட்டுப்படுத்தும் முறைகளும்

Facebook twitter googleplus pinterest LinkedIn


கால்நடைகளில் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகளும், கட்டுப்படுத்தும் முறைகளும் முன்னுரை

மனித இனம் தோன்றி ஓரிடத்தில் நிலையான வாழ்க்கையை தொடங்கிய காலம் தொட்டு கால்நடை வளர்ப்பு என்பது பிரதானமாக உள்ளது.  ஆனால் இன்று உலக அளவில் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, ஆடு, மாடுகள் வளர்ப்பில் படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  இதில் கால்நடைகளை தாக்கும் புற, அக ஒட்டுண்ணிகள் கால்நடை வளர்ப்பில் பொருளாதார நட்டத்தை ஏற்படுத்துகிறது.  இந்தப் பாடத் திட்டத்தில் ஒட்டுண்ணிகளின் வகைகள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் அவற்றை தடுக்கும் முறைகள் பற்றி பார்க்கலாம்.

 

கால்நடைகளைத் தாக்கும் உண்ணிகளின் வகைகள்

உண்ணிகள் 1. மென் உண்ணிகள் மற்றும் 2. கடினமாக உண்ணிகள் என இருவகைப்படும்.  மென் உண்ணிகள் அர்க்கஸ், பெர்சிகஸ் என்னும் உண்ணிகள் பறவைகளையும், ஆர்னிதோடொரசஸ் மற்றும் ஓட்டோபீயஸ் போன்ற உண்ணிகள் கால்நடைகள் மற்றும் மனிதனையும் தாக்கக் கூடியவை.  கடின உண்ணிகள் அவற்றின் வாழ்க்கை சுழற்சி முறையில் ஒன்று, இரண்டு மற்றும் மூன்று உயிரினங்களை சார்ந்து வேறுபடுகிறது.  கடின வகை உண்ணிகள் தனது வாழ்க்கை சுழற்சியில் உணவுக்காகவும், இனப்பெருக்கத்திற்காகவும் இரத்தத்தை உறிஞ்சி பெருக்கமடைகின்றன.

 

கால்நடைகளில் உண்ணிகளால் நேரடியாக ஏற்படும் பாதிப்பு

1. கடின வகை உண்ணிகள் இரத்தத்தை உறிஞ்சுவதற்காக கடிக்கும்பொழுது தாங்கமுடியாத வலி உண்டாவதால் கால்நடைகளின் உற்பத்தித் திறன் குறைந்துவிடும். 

2. உண்ணிகள் கடிப்பதன் மூலம் புண்கள் ஏற்படுவதால் ஈர்ப்புழு புண்களை உண்டாக்கும்.

3. கால்நடைகளில் உண்ணிகள் அதிகமாக இருந்தால், அதிக அளவு இரத்தம் உறிஞ்சப்படுவதால் இரத்த சோகை ஏற்படும். 

4. பெண் உண்ணிகள் அதிக இரத்தம் உறிஞ்சக்கூடியவை.  ஒரு பெண் உண்ணி 0.2 முதல் 2 மில்லி வரை இரத்தத்தை உறிஞ்சும்.

5. உண்ணிகள் கடிப்பதால் சொறி, வீக்கம் மற்றும் புண்கள் ஏற்பட்டு தோலின் தரம் குறைந்துவிடும்.

6. உண்ணிகள் கடிக்கும்போது அதன் உமிழ்நீர் கால்நடைகளின் உடலில் பரவி பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

 

கால்நடைகளில் உண்ணிகளால் மறைமுகமாக ஏற்படும் பாதிப்புகள்

உண்ணிகள் மறைமுகமாக பல நோய்கள் பரவ காரணமாக உள்ளது. 

1. நுண்ணுயிர் நோய்கள் : துளரிமியா. தொண்டை அடைப்பான் போன்றவைகளை பரப்புகின்றன.

2. நச்சுயிரி நோய்கள் : குதிரை மூளைக் காய்ச்சல் நோய். ஆடுகளில் லுபிங் இல் என்னும் வாத நோய் போன்றவற்றை பரப்புகின்றன.

3. ரிக்கட்சியல் நோய்கள் : அனாபளாஸ்மாசிஸ், மழைக்காய்ச்சல், இருதய நோய் மற்றும் க்யூ காய்ச்சல் போன்ற நோய்கள் உண்ணிகள் மூலம் பரவுகின்றது.  மேலும் ஒரு செல் ஒட்டுண்ணிகள் கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் மறைமுகமாக பல நோய்களை பரப்புகின்றன. 

 

கால்நடைகளை உண்ணிகளின் தொல்லையில் இருந்து பாதுகாக்கும் முறைகள்

உண்ணிகளின் வாழ்க்கை சுழற்சி முறையை அறிந்து, கட்டுப்படுத்தும் முறைகளை மேற்கொண்டால் எளிதாக அழித்துவிடலாம். 

 

மென் உண்ணிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

மென் உண்ணிகள் மண் தரை, மணல், சுவர்களில் காணப்படும் துவாரம் மற்றும் விரிசல்களில் காணப்படும்.  சூடான தார்க் கொண்டு சுவர்களில் காணப்படும் துவாரம் மற்றும் விரிசல்களை அடைக்கவேண்டும்.  சல்பர் டையாக்சைடு என்ற மருந்தைக் கொண்டு புகை மூட்டம் செய்யலாம்.  டிடிடி என்னும் மருந்தை தெளித்து அழித்துவிடலாம்.  மெட்டல் கூண்டுகளை தீயினால் கருக்கினால் மென் உண்ணிகள் அழிந்துவிடும்.

 

கடின உண்ணிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

1. கைகளால் அகற்றுதல் - கால்நடைகளில் காணப்படும் உண்ணிகளை கைக் கொண்டு அகற்றி கட்டுப்படுத்தலாம்.

2. இரசாயன முறையில் கட்டுப்படுத்துதல் - கால்நடைகளை குறுகிய பாதையில் நடக்கவிட்டு பூச்சிக்கொல்லி மருந்துகளை கால்நடைகளின் மேல் தெளிப்பதாலும், மருந்துக் குளியல் செய்வதாலும் கட்டுப்படுத்தலாம்.  உண்ணிகளை கட்டுப்படுத்த சுமத்தியான் 0.5 சதவீதம், மாலத்தியான் 1 சதவீதம், டயாசினால் 0.5 சதவீதம், குமாபாஸ் 0.05 சதவீதமும் இதில் ஏதாவது ஒன்றினை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியான அளவு பயன்படுத்தி கால்நடைகளை உண்ணியின் பாதிப்பிலிருந்து பாதுகாக்கலாம்.

உண்ணிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட காது தோடுகள், காது மற்றும் கழுத்து வளையங்களை பயன்படுத்திக் கட்டுப்படுத்தலாம்.

 

உயிரியல் முறையில் கட்டுப்படுத்துதல்

தொடர்ந்து ஒரே வகையான பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும்.  நன்மை செய்யும் பூச்சிகளை கொண்டு உண்ணிகளை அழிக்கலாம்.  கன்டீரல்ஸ், கூக்கரை போன்ற வகையான இனப் பெண் பூச்சிகள் உண்ணிகளின் நிம்ப் எனும் இளம் பருவத்தின் மீது முட்டையிட்டு, முட்டைகள் பொரிக்கப்பட்டு பூச்சிகளின் லார்வா என்னும் உண்ணிகளின் இளம் பருவ நிலையை அழித்துவிடும். கால்நடைகளின் கொட்டகையில் கோழிகளை வளர்த்தால், உண்ணிகளை கொத்தி உண்டு அழித்துவிடும்.  பூச்சிக்கொல்லி தாவரமான ஸ்டைலோசென்தஸ் வகை தாவரத்தில் சுரக்கும் ஒரு வகை திரவம் உண்ணிகளின் லார்வா என்னும் இளம் பருவ நிலையின் மேல் ஒட்டிக்கொண்டு அதை செயலிழக்கச் செய்து கொன்றுவிடும்.

 

பிற முறைகளில் கட்டுப்படுத்துதல்

1. ஆண் உண்ணிகளை மரபணு மாற்றம் செய்து அவற்றின் வீரியத் தன்மையைக் குறைத்து உண்ணிகள் பெருக்கமடைவதைக் குறைக்கலாம். 

2. உண்ணிகளுக்கு எதிர்ப்புச் சக்தி கொண்ட கால்நடை இனங்களை தேர்வு செய்து வளர்க்கலாம்.(ஜெடி மாடுகள்)

3. உண்ணிகளை இயற்கையாகவே கவர்ந்துக் கொல்லக் கூடிய இரசாயன மருந்துகளை பயன்படுத்தி உண்ணிகளை கட்டுப்படுத்தலாம்.

4. உண்ணிகளால் பாதிக்கப்பட்ட கால்நடைகள் மேயும் நிலத்தை உழுதும், சுழற்சி முறையில் மேய்ச்சல் நிலத்தை பயன்படுத்தியும் உண்ணிகளின் பாதிப்பிலிருந்து கால்நடைகளை காப்பாற்றலாம்.

5. புகையிடுதல் - மண் சட்டியில் நெருப்பைப் போட்டு, சாம்பிராணி, வாடைக்குச்சி, வெங்காயத்தோல், வேப்பிலை, நொச்சி இலைகளை போட்டு புகையிட்டு உண்ணி, கொசு போன்றவற்றை கட்டுப்படுத்தலாம்.

 

கால்நடைகளில் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்புகளும், கட்டுப்படுத்தும் முறைகளும் முடிவுரை

மேலே கண்ட முறைகளின் படி இயற்கையாகவும், செயற்கையாகவும் உண்ணிகளை கட்டுப்படுத்தி நாம் வளர்க்கும் மதிப்புமிக்க கால்நடைகளை காப்பாற்றி பண்ணையில் அதிக இலாபம் அடையலாம்.