வாழ்நாள் கல்வி

குடற் புழு நீக்கம்

ஆடுகளுக்கான குடற் புழு நீக்கம்

குடற் புழு நீக்கம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


குடற் புழு நீக்க முன்னுரை

எல்லா உயிரினங்களிலும் குடல் புழுக்கள் ஏற்படுவது இயற்கை.   இந்த குடல் புழுக்கள் கால்நடைகளான ஆடுகளிலும் காணப்படும். ஆடுகளின் குடலில் மூன்று வகையான குடல் புழுக்கள் காணப்படும். அவை

1.தட்டை புழுக்கள்

2. நாடா புழுக்கள் மற்றும்

 3.உருண்டை புழுக்கள் ஆகும். 

இந்த புழுக்கள் ஆடுகளின் குடலில் இருந்து கொண்டு ஆடு உட்கொள்ளும் தீவனங்களில் உள்ள சத்துக்களை உறிஞ்சி வாழுகிறது. இதனால் ஆடுகள் சத்து குறைபாட்டினால் மெலிந்து காணப்படும். சரியாக தீவனம் எடுக்காது.   இது நாளடைவில் ஆடுகள் மற்றும் குட்டிகள் மரணத்தை சந்திக்க வேண்டி வரும்.

 

குடற்புழுக்களால் ஆடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஆட்டின் குடல் பகுதியில்  மூன்று வகையான புழுக்கள் காணப்படும். இதை உறுதிசெய்ய ஆடுகளின் சாணத்தை கால்நடை மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஆய்வகத்தில் வைத்து பரிசோதனை செய்ய வேண்டும். பரிசோதனையின் அறிக்கையின் படி எந்த வகையான புழுக்கள் உள்ளதோ அதற்கு தகுந்தாற்போல் மருந்துகள் கொடுக்க வேண்டும்.

 

குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் தென்படும் அறிகுறிகள்

குடற்புழுக்களினால் பாதிக்கப்பட்ட ஆடுகளில் தென்படும் அறிகுறிகளாவது :

1.காய்ச்சல் அல்லது பெருஞ்சாணி போடுதல்

2.எடை குறைதல்

3. வளர்ச்சியின்மை 

4.ஒழுங்கற்ற மயிர்க்கால்கள்

 5.தாடையின் கீழ் வீக்கம்

 

குடற்புழு நீக்கம் செய்வதின் அவசியம்

ஆடுகளுக்கு குறைந்தது வருடத்திற்கு மூன்று  முறை குடற்புழு நீக்கம் செய்தால் ஆடுகள் ஆரோக்கியமாக வளரும்.  குடற்புழு நீக்கம் மழைக்காலத்திற்கு முன் ஒரு முறையும்,  மழைக்குப் பின்னர் ஒரு முறையும், வெயில் காலத்திற்கு முன் ஒரு முறையும் குடற்புழு நீக்கம் செய்யவேண்டும். குடற்புழு நீக்கத்திற்கு ஒரே மருந்தை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் வேறு வேறு மருந்துகளை பயன்பபடுத்துவது நல்லது.  சாணத்தை பரிசோதனை செய்தபின் குடற்புழு நீக்க மருந்தை தேர்வு செய்வது மிகவும் நல்லது.

 

குடற்புழுவிற்கான மூலிகை வைத்தியம்

வேப்பிலை கொழுந்தை எடுத்து, இடித்து சாறு எடுத்து 50-100மி;ல்லி ஒரு ஆட்டிற்கு கொடுத்தால் வயிற்றில் உள்ள குடல் புழுக்கள் நீங்கும். கமலாஆரஞ்சு பழத்தின் பழம்இ விதைகள் மற்றும் வேர்கள் வெள்ளாடுகளின் குடலில் உள்ள நாடா புழுக்களின்வகையைச் சேர்ந்த ஹெமான்கஸ் இன உருண்டை புழுக்கள் மற்றும் இதர குடல் புழுக்களை நீக்கும் தன்மைக் கொண்டவை. இந்த கமலா ஆரஞ்சு மரத்தின் வேர், பட்டை, இலை, பழம், விதைகள் போன்றவற்றை அரைத்துப் பொடியாக்கி 375மி.கி என்ற அளவில் வாய் வழியாக கொடுக்கலாம்                                   

 

உண்ணி மற்றும் சொரிபூச்சி நீக்கத்திற்கான மூலிகை வைத்தியம்

1. வேம்புவின் பட்டை, இலை, விதை, எண்ணெய், சொரிப் பூச்சிகளை நீக்கும் மருந்தாக பயன்படுகிறது.  வேப்ப எண்ணெய் ஆடுகளில் உள்ள சொரிப்பூச்சிகளை அழிக்க பயன்படுகிறது.

2. புங்க மர விதையின் எண்ணெய் உண்ணிகளை நீக்கவும் வெள்ளாடுகளில் உள்ள சொரிப்பூச்சிகளை அழிக்கவும் பயன்படுகிறது.

3. நீர்ப்பாசி செடிகளின் விதை, பைரித்திரம் செடியின் பூக்கள் உண்ணிகளை நீக்க பயன் படுகிறது.

 

தட்டை புழுக்கள்

இந்த புழுக்களால் தாக்கப்பட்ட ஆடுகளில் இரத்தம் கலந்த வயிற்றுப் போக்கு காணப்படும். தாடையின் அடி பகுதி, வயிற்றுபகுதி மற்றும் கால்களில் நீர் கோர்த்து வீக்கமாக இருக்கும்.  தாடை வீக்கம் காலையில் காலை நேரங்களில் இருக்காது. மாலையில் மேய்சலுக்கு சென்று திரும்பும் நேரத்தில் வீக்கம்  காணப்படும். தாடை வீக்கம் தண்ணீர் கோர்த்தது போல் தொட்டால் மிருதுவாக இருக்கும். தீவனம் உட்கொள்ளாமல் உடல் எடை குறைந்து  நடக்க முடியாமல் மந்தையில் பிரிந்து நின்று தனித்து காணப்படும். மிகவும் சோர்ந்து இரத்த சோகையுடன் பற்களை கடித்துக் கொண்டு இருக்கும். கெட்ட நாற்றத்துடன் கறுப்பு நிறத்தில் கழிச்சல் காணப்படும். பின்புறம் தொடைபாகம் மற்றும் வாலில் சாணம் ஒட்டிக் கொண்டிருக்கும் சில ஆடுகள் தலையை வயிற்று மேல் வைத்தபடி இறந்து விடும்.   காய்ச்சல் அதிகம் இருக்காது.  பாதிக்கப்பட்ட ஆடுகள் 30 நாட்களில் இறந்து விடும். 

 

தட்டைப்புழுக்களை நீக்குவதற்கான வழிமுறைகள்

தட்டை புழுக்களை நீக்ககுவதற்கு டிசம்பர்- ஜனவரி மற்றும் மார்ச்-ஏப்ரல் மாதங்களிலல் ஆக்சிகுளோசனைடு மருந்து கொடுக்க வேண்டும். பெரும்பாலும் தட்டைப்புழுக்கள் நத்தைகளின் மூலம் பரவுகிறது. அதனால் தட்டை புழுக்களை பரப்ப காரணமான நத்தைகளை  வராமல் தடுக்க ஆடுகள் வளர்க்கும் இடத்தைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.   குளம் குட்டை, ஏரிகளின் நீர் பகுதிகளின் ஒரத்தில் உள்ள புல் பூண்டு மற்றும் செடிகளில் அடியிலும் நத்தைகள் முட்டையிடும். நத்தைகள் தன் இனத்தை பெருக்கி அதன் மூலம் ஆடு மற்றும் கால்நடைகளுக்கு பலவிதமான நோய்களை பரப்புகிறது.  நீர்நிலைகளின் ஒரங்களில் வேம்பு, புங்கன், பப்பாளி மரங்களை வளர்ப்பதன் மூலம் புல், பூண்டு, செடி கொடிகளை அகற்றிவிட முடியும்.  இதனால் நத்தைகளின் தொந்தரவு இல்லாமல் பாதுகாத்து ஆரோக்கியமான ஆடுகளாக வளர்க்கலாம்.

 

குடற் புழு நீக்க நன்மைகள்

குடற்புழு நீக்கம் செய்வதினால் ஏற்படும் நன்மைகளாவன :

1.ஆடுகளின் வளர்ச்சித் திறன் அதிகரிக்கும்

2. எடை கூடும்

3. குட்டிகளின் இறப்பு விகிதம் குறையும்

4. சினைபடும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

குடற் புழு நீக்க முடிவுரை

ஆடுகளுக்கு முறையாக குடற் புழு நீக்கம் செய்து வளர்த்தால் அவைகள் நன்கு தீவனங்கள் உட்கொண்டு ஆரோக்கியமாக வளரும்.  அதோடு சரியான காலத்தில் சினைப்பருவம் அடைந்து குட்டிகள் ஈன்று, வளர்ப்பவர்களுக்கு நல்ல இலாபத்தைக் கொடுக்கும். எனவே குடற் புழு நீக்கம் தவறாது செய்து ஆடுவளர்ப்பின் மூலம்  நல்ல இலாபம் பெறுவோம்.