வாழ்நாள் கல்வி

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம்

Facebook twitter googleplus pinterest LinkedIn


இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்திற்கான முன்னுரை

இயற்கை விவசாயம் இந்தியாவில் வரலாற்று காலம் முதல் பின்பற்றபட்டு வரும் முறையாகும். நமது முன்னோர்கள் அடுப்பு சாம்பல், வேப்ப எண்ணெய், கால்நடைகளின் கழிவுகளை பயன்படுத்தி விவசாயம் செய்து வந்துள்ளனர். மண்ணில் இருக்கும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் மண்ணில் இடும் அல்லது மண்ணில் விழும் அங்ககப் பொருள்கள், விவசாய கழிவுகளை மக்கச் செய்து பயிர்களுக்கு ஊட்டமும் நல்ல விளைச்சலையும் தரும். 'இயற்கை வேளாண்மை என்பது செயற்கை உரங்கள் பூச்சி கொல்லி ஆகியவற்றை முடிந்த அளவு தவிர்த்து பயிற் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக உரம் பயன்படுத்துதல் இவற்றின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் மண்வளம் அடைவதாகும்' என அமெரிக்க இயற்கை வேளாண் ஆராய்ச்சி குழு கூறுகிறது.  'இயற்கை வேளாண்மை என்பது இயற்கையுடன் இணைந்;து உயிரியல் சுழற்சி, உயிரியல் செயல்பாடுகள், அங்கக கழிவுகள், ஆகியவற்றைக் கொண்டு, சுற்றுச் சூழலின் ஆரோக்கியத்தை காக்கும் பயிர் வளர்ப்பு முறையாகும் இயற்கையின் சூழலை பாதுகாக்கும் வகையில் உழவியல், உயிரியல், இயந்திர முறைகளை பின்பற்றுதல் இதன் தனித்தன்மையாகும்.

 

மனிதனின் அதீத செயல்பாடுகள்

'இயற்கை ஒவ்வொரு மனிதனின்; தேவைகளை பூர்த்தி செய்யும். ஆனால் பேராசையை அல்ல –என்றார் மகாத்மா காந்திஜி.

இந்த பூமியானது இப்புவியில் வாழும் எல்லா உயிரினங்களின் தேவையையும் பூர்த்தி செய்யும். மற்ற உயிரினங்கள் எல்லாம் தன் தேவைகளை மட்டும் பூர்த்தி செய்து கொண்டு வாழ்ந்து வருகிறது. ஆனால் மனிதன் மட்டும் தன் பேராசையினால் இயற்கை வளங்களான எரிபொருள்கள், உலோகங்கள் அலோகங்கள் என எல்லாவற்றையும் தேவைக்கு அதிகமாக வெட்டி எடுத்து பயன்படுத்துகிறான்.  அதன் விளைவு பூமி வெப்பமாகி வருகிறது. இதனால் பருவக் காலங்களில் மாற்றம் ஏற்பட்டு அதிக மழை மழையின்மை, கடும் வறட்சி, நீர் தட்டுப்பாடு போன்றவை ஏற்படுகிறது.

 

வேளாண்மையின் தேவை

வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வேளாண் உற்பத்தியை நிலைப்படுத்துதல் மற்றும் அதை சீராக உயர்த்துதலும் தற்போதைய தேவையாகிறது.  பசுமை புரட்சி என்ற பெயரில் அதிகமான இரசாயன உரங்கள், பூச்சி கொல்லி மருந்துகள் பயன்படுத்தி உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்த முறையில் உற்பத்தியான உணவு பொருள்களினால் எண்ணிலடங்கா நோய் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்துள்ளோம். இரசாயன முறையை தவிர்;த்து இயற்கையாக ஆரோக்கியத்தை பாதுகாக்ககூடிய இயற்கை வேளாண்மையை பின்பற்றுதல் வருங்கால சந்தயினருக்கு நாம் செய்யும் மகத்தான சேவையாகும்.  இயற்கை வேளாண்மையில் அதிக மகசூல் பெறும் வழியினை பின்பற்றுதல் மிகவும் அவசியம்.

 

இயற்கை வேளாண்மையின் சிறப்பியல்புகள்

•      மண்ணின் வளத்தை பாதுகாத்திட மண்ணில் உள்ள நுண்ணுயிர்களின் செயல்;பாட்டினை அதிகரிக்க வேண்டும்.

•      பயிர்களுக்கு மறைமுகமாக ஊட்டசத்ததுக்களை அங்கக கழிவுகள் வழங்கும். இந்த ஊட்டசத்துக்களை நுண்ணுயிர்களின் உதவியால் பயிர்கள் உட்கொள்கின்றன.

•      நிலத்திற்கு தகுந்த பயிர்களை பயிரிடுதல் உயிரியல் செயல்பாடுகள் மூலம் தழைச்சத்து நிலைநிறுத்துதல், அங்கக பொருள்களின் சுழற்சி முறை மூலமாக தழைசத்தை தன்னிறைவு அடையச்செய்தல்.

•      களை, பூச்சிகளிலிருந்து பாதுகாப்பு, நோய் பாதுகாப்பு இவைகளை பயிர் சுழற்சி முறை, தீமை செய்யும் புழு, பூச்சிகளை அழிக்கும் இயற்கை உயிரினங்களை ஊக்குவித்தல், அளவான ரசாயன உர பயன்பாடு, நோய் எதிர்ப்பு திறன் கொண்ட பயிர்களை பயன்படுத்துதல், அங்கக எரு இடுதல் ஆகியவற்றின் மூலம் பெறுதல் இதன் சிறப்பாகும்.

•      இயற்கை வேளாண் முறையில் கால்நடைகளுக்கு கிடைக்கும் தீவனங்கள்     நஞ்சில்லாதவையாக இருக்கும்.. கால்நடைகளின் கழிவுகள் வீணாகாமல் முறையாக பயன்படுத்தப்படும்.

•      வேளாண் முறையில் கவனம் செலுத்துவதால் வன வாழ்வு மற்றும் இயற்கை உறைவிடத்தை பாதுகாத்தல் சாத்தியமாகிறது.

 

இயற்கை வேளாண்மையின் நெறிமுறைகள்

1.      ஆரோக்கியம்: இயற்கை வேளாண்மை மண் தாவரம் விலங்கு, மனிதன் மற்றும் உலகின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைந்து மேம்படுத்த உதவுகிறது தனிமனிதன் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியம் சுற்றுசூழலின் ஆரோக்கியத்துடன் இணைந்தது வளமான மண்ணில் வளமான பயிர்கள் விளைகிறது. இவை மனிதன் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்தை பேணுகிறது.

2.      சுற்றுச்சூழல்: இயற்கை வேளாண்மையானது, சுற்றுப்புற சூழல் மற்றும் சுழற்சிகளை சார்ந்திருக்க வேண்டும். இயற்கை வேளாண்மை என்றுமே சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தை காத்து அதனுடன் இணைந்;து செயல்பட வேண்டும்.  இயற்கை வேளாண்மை சுற்றுச்சூழல் மற்றும் சுழற்சிகளை சார்ந்திருக்க வேண்டும். இடுபொருள்களின் அளவை குறைத்து மறு சுழற்சி, மறு உபயோகம், சிறந்த பொருள் மேலாண்மை மற்றும்; சக்தி மேலாண்மையை

 

 

 

 

 

பின்பற்றுதல் வேண்டும். இது இயற்கை மூலதனம் பொருள்களை சிக்கனமாக உபயோகிக்க உதவுகிறது.

3.      நம்பகத்தன்மை: இயற்கை வேளாண்மை மற்ற உயிரினங்கள் வாழ ஒரு நல்ல

இயற்கை சூழலை அமைத்து தருவதாக இருக்க வேண்டும். உணவு பற்றாக்குறை நீக்கி          மக்களுக்கு தரமான வாழ்வை அளிக்க வல்லதாக இருக்க வேண்டும். எதிர்கால சந்தயினருக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இயற்கை வளங்களை உபயோகப்படுத்தும் முறையாக அங்கக வேளாண்மை அமைய வேண்டும்.

4.      இயற்கையை பின்பற்றுதல்: அங்கக வேளாண்மையை பின்பற்றுபவர்கள் உற்பத்தியின் தரத்தையும், அளவையும் அதிகபடுத்த முயற்சி எடுக்க வேண்டும். அந்த முயற்சி பாதுகாப்பானதாகவும், சிக்கனமானதாகவும் இருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் நமது சுற்று;சூழலை பேணிக்காக்கவும், எதிர்கால சந்ததியினருக்கு தீங்கு விளைவிக்காததாகவும் அமையும்.

 

இயற்கை வேளாண்மையின் முறைகள்

•      பண்டைய மேலாண்மை முறையிலிருந்து அங்கக மேலாண்மை முறைக்கு மாறுதல்.

•      பல்லுயிர் பெருக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் சுற்றுசூழலை மேலாண்மை அடைய செய்ய வேண்டும்.

•      மாற்று காரணிகளான பயிற்சுழற்சி, பயிற்கழிவு மேலாண்மை அங்கக எருவு, உயிரியல் இடுபொருள்கள் ஆகியவற்றின் மூலம் பயிர் உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.

•      இயற்பியல், உயிரியல், உழவியல் முறைகளைக் கொண்டுகளை மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் வேண்டும்.

•      கால்நடைகளை முறைப்படி பராமரித்து அவற்றையும் வேளாண்மையின் ஒரு அங்கமாக ஆக்குதல் வேண்டும்.

 

நவீன வேளாண்மையின் பாதிப்புகள்

இன்றைய இரசாயன வேளாண்மை முறையில் அதிக மகசூல் மற்றும் லாபம் கிடைத்தாலும், அவை பாதகமானது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனியாக நமக்கு உணர்த்துகிறது.

•      நிலவளத்தை குறைத்தல்: அளவுக்கதிகமான இரசாயன உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்துவதாலும் பயிற் சுழற்சி முறையை பின்பற்றாததாலும் நிலத்தின் ஊட்டசத்து அளவு குறைந்து வருகிறது.

•      இரசாயன உரம்: இரசாயன உரத்தை பயன்படுத்தி மகசூலை அதிகப்படுத்தினாலும் மண்ணில் நுண்ணுயிர்கள் அழிந்து மண் மலடாக மாறிவருகிறது.

•      நைட்ரேட் சத்து அடித்து செல்லப்படுதல்: இரசாயன உரங்களில் இருக்கும் நைட்ரேட் மழையினால் அடித்து செல்லப்பட்டு குடி நீர்ரை மாசுபடுத்துகிறது.

•      மண்அரிப்பு : அதிகமுறை ஆழமான உழவு செய்தலினால் மேல் மட்டத்து மண் அரித்து செல்ல வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

•      மண் இறுகுதல்: மண்ணின் அமைப்பு மிகவும் சேதமடைந்து வருகிறது டிராக்டர் பயன்படுத்தி உழுவதால் மண்ணின் அமைப்பு மாறி இறுகிய நிலை ஏற்பட்டுவருகிறது. இதை மாற்ற நாட்டு கலப்பை கொண்டு வருடத்திற்கு ஒரு முறையேனும் உழுக வேண்டும்.;

•      உணவு மாசுபடுதல்: இரசாயனப் பொருள்களால் உணவு மாசு படுதல் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  இது சுற்றுச் சூழல் ஆரோக்கியத்தை மிகவும் மாசுபடுத்துகிறது.

 

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்திற்கான முடிவுரை

விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்க அயல் மகரந்த சேர்க்கை நடைபெற வேண்டும்.  இந்த அயல்  மகரந்த சேர்க்கைக்கு துணை புரிவது தேனீக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் ஆகும்.  இந்த இரண்டு இனங்களும் காப்பாற்றப்பட இரசாயன பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும்.  கால்நடைகளை அதிகம் வளர்த்து அதன் கழிவுகளை மண்ணிற்கு உரமாக்கிட வேண்டும்.  விவசாய உபரி கழிவுகளை மக்க வைத்து, உரமாக மாற்றி மண்ணில் இட வேண்டும்.  மண்புழு உரம், ஊட்டமேற்றிய தொழுவுரம், கம்போஸ்ட் உரங்களை தயாரித்து மண்ணில் அடி உரமாக போட்டு நீர் மேலாண்மையைக் கடைபிடித்து, அதிக விளைச்சலை பெருக்க முயலவேண்டும்.  சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், காய்ச்சல் பாய்ச்சலுடன் கூடிய நீர் மேலாண்மையைக் கடைபிடிக்க வேண்டும்.  பெருகிவரும் நீர்த் தேவையை சமாளிக்க பெய்யும் மழை நீரை நீர்த் தேக்க இடங்களில் தூர்வாரி சேமிக்கவேண்டும்.  நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்த மழை நீர் சேமிப்பு, மழை நீர் அறுவடை மற்றும் ஆறுகளின் நீர் வரத்து ஓடைகள், கால்வாய்களில் நடக்கும் மணல் கொள்ளைகளை தடுக்கவேண்டும்.  குறைவான நீர்த் தேவை உள்ள சிறுதானியங்கள் போன்றவற்றை பயிரிட்டு நீரை சேமிக்கலாம்.  இது போன்ற செயல்பாடுகள் மக்கள் இயக்கமாக மாறினால்தான், இயற்கை விவசாயம் ஒரு வெற்றியான இயக்கமாக மாறும். 

'இயற்கையோடு இணைவோம்

இன்பமயமான வாழ்க்கையை வாழ்வோம்'