வாழ்நாள் கல்வி

உளுந்து சாகுபடி

உளுந்து சாகுபடி

உளுந்து சாகுபடி

Facebook twitter googleplus pinterest LinkedIn


உளுந்து சாகுபடிக்கான முன்னுரை

நம் உணவில் பயறு வகைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. உடல் வளர்ச்சிக்கு தேவையான புரதசத்து பயறு வகைகளில் இருந்து கிடைகிறது. ஒரு மனிதனின் ஒரு நாள் தேவை 80கிராம் புரதம் ஆகும் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஆனால் இந்தியர்கள் இதைவிட குறைவாகவே உட்கொள்ளுகின்றனர். இதை ஈடுகட்ட பயறு வகைகளின் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்தியா இன்று உள்ளது. தென் மாநிலங்களில் உளுந்து, துவரை, பாசிபயறு, தட்டைப்பயறு, கொள்ளு போன்றவை. அதிக அளவில் பயிரிடப்படுகிறது இந்தியாவின் சராசரி மகசூலான ஒரு ஏக்கருக்கு 600 கிராம் என்பது .தமிழ்நாட்டில் 250 கிலோவாக உள்ளது.  நெல் அதிகம் விளையும் மாவட்டங்களான கடலூர், திருவள்ளூர், தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களில் தேனி, மதுரை, திண்டுக்கல், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் உளுந்து அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

 

விதைத் தேர்வு

நல்ல முளைப்புத் திறன் கொண்டதாகவும், சரியான ஈரப்பதத்துடனும், பூஞ்சான் பூச்சித் தாக்குதல் இன்றியும் வேளாண்மைத் துறையின் சான்று பெற்ற விதைக்கும் காலத்திற்குள் உள்ள விதைகளாக இருக்க வேண்டும்.

 

விதை நேர்த்தி

உளுந்து, பாசிபயறு விதைகளை விதைப்பதற்கு முன் 0.2% துத்தநாக சல்பேட் மாங்கனீசு சால்பேட் மற்றும் 0.1% சோடியம் மாலிப்டெட் கலந்த கரைசலில் 3 பங்கு விதைக்கு ஒரு பங்கு  கரைசல் என்னும் அளவில் 3 மணி நேரம் ஊறவைக்க வேண்டும். விதையை விதை நேர்த்தி செய்து விதைக்கவேண்டும். ஒரு கிலோ விதைக்கு கீழ்கண்ட உயிர்நோய் கட்டுப்பாட்டுக் காரணிகளை ஒன்றன்பின் ஒன்றாக விதையுடன் சேர்த்து கலக்க வேண்டும். டிரைக்கோடெர்மா விரிடி-4 கிராம் (வாடல் நோயைக் கட்டுப்படுத்த) ரைசோபியம் – 20 கிராம் (வளிமண்டல நைட்ரஜனை நிலைப்படுத்த) அசோபாஸ் – 40 கிராம் இந்த மாதிரி விதை நேர்த்தி முடிந்தவுடன் விதைகளை நிழலில் உலர்த்தி பின்பு விதைக்க வேண்டும்.

இவ்வாறு விதைநேர்த்தி செய்யமுடியாத சூழலில் பூசாணக் கொல்லி மற்றும் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்யலாம்.

ஒருகிலோ விதைக்கு 2 கிராம் கார்பெண்டாசிம் மருந்து அல்லது 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடாமோனாஸ் என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின் ஒரு பாக்கெட் ரைசோபியம் நுண்ணுயிர் கலவை (200 கிராம்) மற்றும் ஒரு பாக்கெட் பாஸ்போ பேக்டீரியா (200 கிராம்) ஆகியவற்றை 300மிலி ஆறவைத்த கஞ்சியுடன் கலந்து பின்னர் விதையுடன் கலந்த 4 முதல் 5 மணி நேரம் நிழலில் உலர்த்திய பின் விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்.

நல்ல மகசூல் கிடைக்க ஆடி(July – August) அல்லது மாசி(February-March) பட்டத்தில் பயிர் செய்வது நல்லது. பூ பிடிக்கும் போது அதிக வெயிலோ விதை முதிரும் போது மழையோ இல்லாத பருவமாக இருத்தல் அவசியம்.

 

நிலம் தயார் செய்தல்

நாம் விதை உற்பத்திக்கு எனத் தேர்ந்தெடுத்த நிலத்தை மூன்று முதல் நான்கு முறை நன்கு உழுது பார்கள் அமைக்க வேண்டும். கடைசி உழவின்போது பயிருக்குத் தேவையான தொழு உரத்தை (1000 கிலோ அல்லது 10 வண்டி) இடவேண்டும். சூடோமோனாஸ், டிரைக்கோடெர்மா போன்ற உயிர் உரம் மற்றும் நோய்க்கட்டுப்படுத்தும் காரணிகளை 50 கிலோ எருவுடன் அல்லது மண்புழு உரத்துடன் ஒரு கிலோ என்ற அளவில் கலந்து நன்கு தூவி உழ வேண்டும். இந்த நன்மை செய்யும் உயிர்க்காரணிகள் மண்ணில் நன்கு பெருகி வாடல் நோய் ஏற்படுத்தும் நுண்ணுயிர்களை அழிக்கின்றது.

உயிர்க் காரணிகளை மண்ணில் இடுவதற்கு முன் எரு அல்லது மண்புழு உரத்துடன் கலந்து ஒரு வாரம் அல்லது 10 நாள் நிழலில் வைத்திருந்தால் உயிர்க் காரணிகள் நன்கு பெருகி விடும் இவற்றை வயலில் இடுவதனால் நல்ல பலன் கிடைக்கும்.

 

அடியுரம்

ஒரு ஏக்கருக்கு 20 கிலோ யூரியா, 60 கிலோ சூப்பர் பாஸ்பேட் மற்றும் 10 கிலோ பொட்டாஷ பயிர்கள் விதைத்தவுடன் அதன் பக்கவாட்டில் இட வேண்டும்.

 

விதை அளவு

ஒரு ஏக்கர் விதைக்க 8 கிலோ உளுந்து தேவை.

 

விதைப்பு

விதைகளை 45X30 செ.மீ என்ற இடைவெளியில் விதைக்க வேண்டும். அதாவது பாருக்கு பார் இடைவெளி 45 செ.மீ, செடிக்கு செடி 30 செமீ பார்களின் முக்கால் பாகத்தில் 2 செமீ ஆழத்தில் விதைக்க வேண்டும். பாத்திகளில் பயிர் செய்வதென்றால் 45X30 செமீ இடைவெளியில் நட வேண்டும்.

 

நீர் நிர்வாகம்

தகுந்த சமயத்தில் தண்ணீர் கட்டுவது மிகவும் அவசியம். விதைத்தவுடனும், மூன்றாம் நாளும் உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். அதற்குப் பின் மண்ணின் தன்மைக்கு ஏற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் கட்ட வேண்டும்.

 

களை நிர்வாகம்

விதைத்தவுடன் 750 மிலி பென்டிமொத்தலின் என்றகளைக் கொல்லியை மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். பின் தேவைக்கேற்ப 15 நாட்கள் கழித்து ஒரு களையும், முப்பது முதல் நாற்பது நாட்களில் ஒரு களையும் எடுக்க வேண்டும். பூ பிடிக்கும் சமயத்தில் களைகள் அதிகமாக இருந்தால் கைக்களை எடுப்பது நல்லது. இல்லையெனில் பூக்கள் உதிர்ந்து விடும்.

 

இலைவழி உரம்

நாம் எப்படி அன்றாடம் உணவு எடுத்துக் கொள்கிறோமோ அதுபோல் தாவரங்களுக்கும் வளர்வதற்கு, பூ பூப்பதற்கு, நோய் எதிர்ப்பிற்கு என்று உணவு தேவைப்படுகிறது. தங்களுக்குத் தேவையான உணவை தாவரங்கள் தாங்களாகவே ஒளிச்சேர்க்கையின் மூலம் தயாரித்துக் கொள்கிறது. ஓளிச்சேர்க்கை சரிவர நடக்க வேண்டுமெனில் தாவரங்கள் ஆரோக்கியமாக வீரியத்துடன் இருப்பது அவசியம். இதற்கு நாம் இடும் அடியுரம் மட்டும் போதாது. மேலும் இலைவழி உரம் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை  அதிகப்படுத்திகிறது. பயறு வகை தாவரங்களுக்கு இலைவழி உரம் அளிப்பது பூ உதிர்வதைத் தடுத்த விதைகள் நன்கு முதிர்ந்து ஆரோக்கியத்துடன் இருக்க ஏதுவாகிறது. இலைவழி உரத்திற்கு டி. ஏ. பி. கரைசல் பயன்படுத்தலாம்.

 

பயிர் பாதுகாப்பு

காய்புழு: இவைகள் குருத்து இலைகள், காய்களை துளைத்து தின்றுவிடும். இதற்கு என். பி.வி. 250 மில்லி தெளித்து கட்டுபடுத்தலாம் அல்லது டைகுளோர்வாஸ் 750 மிலி தெளிக்கலாம்.

அஸ்வினி:

இலை, காய்களின் சாற்றை உறிஞ்சி விடுவதனால் இலையின் அகலம் கறைந்து சுருங்கி தடித்துக் காணப்படும். பாசலோன் அல்லது டைமெத்தோயேட் 2 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். தாக்குதலுக்கு ஏற்ப ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ தெளிக்க வேண்டும்.

கொம்புப்புழு: 

இலைகயை அதிவேகமாக தின்று விடும். இதனால் இலையில் காம்பு மட்டுமே இருக்கும். மோனோகுரோட்டாபாஸ் 2 மிலி அல்லது டைக்குளோர்வாஸ் 1.5 மிலி ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

 

அறுவடை

காய்கள் வினையியல் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்ய வேண்டும். காய்கள் கருப்பு நிறம் அடைவதே வினையியல் முதிர்ச்சி அடைவதாகும். விதைத்த 65-70 நாட்களில் காய்கள் அறுவடைக்குத் தயாராகின்றன.  உளுந்தில் காய்கள் பச்சை நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறும். அறுவடைக்கு முன்னர் பயறு வண்டுகளின் சேதத்தைத் தடுக்க, மாலத்தியான் மருந்தை லிட்டருக்கு இரண்டு மில்லி என்ற அளவில் கலந்து காய்களின் மீது நன்கு படுமாறு தெளிப்பது நல்லது.

காய்களை அறுவடை செய்தவுடன், களத்தில் நன்கு காயவைக்க வேண்டும். இவ்வாறு காயும்போதே காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிவந்துவிடும். இவ்வாறு வெடிக்காத காய்களை குச்சிகொண்டு அடித்து விதைகளைப் பிரித்துக் கொள்ளலாம். பிரித்த விதைகளை நிழலில் உலர்த்தி பிpன் ஈரப்பதம் 10-12 சதம் குறையும் வரை வெயிலில் உலர்த்தி பின் சுத்திகரிப்பு செய்ய வேண்டும்.

 

இரகங்கள்

வ.எண்

பயறு வகை/ இரகங்கள்

வயது(நாட்கள்)

 

1         

கோ-4

70

 

2

கோ-5

70 – 75

 

3

கோ-1

70 – 75

 

4

ஏடிடீ 2

70 – 75

 

5

ஏடிடீ -3

70 – 75

 

6

ஏடிடீ -4

 

60 - 65

7

ஏடிடீ -5

 

63

8

டி -9

65 – 70

 

9

டிஎம்வி 1

65 – 70

 

10

வம்பன் 1

60 – 65

 

11

வம்பன் 2

60 – 70

 

12

வம்பன் 3

65 – 70

 

13

வம்பன் (பிஜி)4

75 – 80

 

14

வம்பன் 5

80 – 85

 

15

ஏபிகே 1

65 - 70

 

 

ஒருமித்த விதை நேர்த்தியினால் ஏற்படும் நன்மைகள்

1.      விதைகள் கடினப்படுத்தப்படுவதால் செடிகள் வறட்சியைத் தாங்கும் தன்மையுடன் இருக்கும்.

2.      விதைகள் இமிடாகுளோபிரிட் என்ற பூச்சி மருந்து கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்டு இருப்பதால் நாற்றுகளை தாக்கும் பூச்சிகளை 30 நாட்கள் வரை கட்டுப்படுத்தும். இதனால் வயலில் விதை முளைத்த பின் தெளிக்கப்படும் முதல் பூச்சி மருந்து, ஒருமித்த விதை நேர்த்தி முறையால் மகசூல் சுமார் 15 சதம் வரை அதிகரிக்கிறது.

3.      உயிர் உரங்களான டிரைக்கோடெர்மா விரிடி வாடல் நோயைக் கட்டுப்படுத்தும்.

4.      உயிர் உரங்களான ரைசோபியம் மற்றும் அசோஸ்பைரில்லம் நாற்றுக்கள் வீரியமுடன் வளர உதவுகின்றது.

 

உளுந்து சாகுபடிக்கான முடிவுரை

மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உளுந்து உற்பத்தி செய்து, நமது மாநிலத்தின் பருப்புத் தேவையை பூர்த்தி செய்யலாம்.  பருப்புத் தேவை பூர்த்தியாகும்போது இறக்குமதி செய்வது தவிர்க்கப்பட்டு, அந்நியச் செலாவணி மிச்சமாகிறது.  இயற்கை முறையில் உற்பத்தி செய்யும்போது நஞ்சில்லாத பருப்பு கிடைக்கிறது.  நம் உடல் நலமும் காக்கப்படுகிறது.

'உளுந்து விளைச்சலைப் பெருக்குவோம்

உடல் உரமுடன் வாழ்வோம்'.