வாழ்நாள் கல்வி

பசுந்தீவன உற்பத்தி - கம்பு நேப்பியர்

பசுந்தீவன உற்பத்தி -கம்பு நேப்பியர்

பசுந்தீவன உற்பத்தி - கம்பு நேப்பியர்

Facebook twitter googleplus pinterest LinkedIn


கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான முன்னுரை

விவசாய நிலத்திலிருந்து கிடைக்கும் மகசூல் குறைவாகக் கிடைக்கும் நிலையில் கால்நடைகளைப் பராமரிக்க ஆகும் செலவு அதிகமாகிறது.  தீவனங்களை விலைக்கு வாங்க முடியாத நிலை ஏற்படுகிறது.  இதை ஈடுகட்டும் வகையில் பசுந்தீவன உற்பத்தியில் மரவகை, தானிய வகை, பயறு வகை மற்றும் புல் வகை தீவனங்கள் உள்ளன. அதில் புதிய வரவாக கம்பு நேப்பியர் புல்வகை தீவனம் உள்ளது.  இது கோ-3 - யை விட சுவையானது. தண்டு மற்றும் இலைகள் மிருதுவானவை. இது ஒரு பல்லாண்டு தீவனப்பயிர். இதன் உற்பத்தி முறையை பற்றி இப்பாடத்திட்டத்தில் காணலாம்.

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான நிலத்தை பதப்படுத்துதல்

நிலத்தை இரும்பு கலப்பை கொண்டு இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழ வேண்டும் கடைசி உழவில் ஏக்கருக்கு 10 டன் அளவு தொழு உரம் போட்டு உழுது பார் பிடிக்க வேண்டும். பார் இடைவெளி 60 செ.மீ ஆக இருக்க வேண்டும்.

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான அடியுரம்

மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு தழை, மணி, சாம்பல் சத்து இடவேண்டும். மண்பரிசோதனை செய்யாவிடில் ஏக்கருக்கு 60:20:15 கிலோ என்ற அளவில் தழை, மணி, சாம்பல் சத்து போட வேண்டும். அடியுரமாக மேற் கூறிய அளவு  இட்டவுடன் 50 சதவீதம் தழைசத்தை நட்ட 30 நாளில் மேலுரமாக இடவேண்டும்.  போடவேண்டிய தழை மற்றும் மணிசத்தின் அளவில் 75 சதவீதம் அசோஸ் பைரில்லாம் (ஏக்கருக்கு 800 கிராம்) மற்றும்   பாஸ்போபாக்டீரியா (ஏக்கருக்கு 800 கிராம்) அல்லது அசோபாஸ் (ஏக்கருக்கு 1600 கிராம்) ஆகியவற்றுடன் கலந்து கலவையாக இடும்போது விளைச்சலை அதிகரிப்பதுடன் 25 சதவீதம் உர அளவினையும் குறைக்கிறது.

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான நடவு

நிலத்தில் நீர்பாய்ச்சிய பின் தண்டுக்கரனை அல்லது வேர்கரனையை 60X50 செ.மீ இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும். இந்த அளவில் நடவு செய்ய ஏக்கருக்கு 14000 கரணைகள் வேண்டும்.   வேர்க்கரணைகள் அல்லது தண்டுகள் மூலம் தான் பயிர் செய்ய முடியும்.

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான நீர் மேலாண்மை

நட்டவுடன் ஒரு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு மூன்று நாள் உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன்பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கழிவு பயன்படுத்தி நீர்பாசனம் செய்யலாம்

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான அறுவடை

களை இருந்தால் ஆட்களை வைத்து எடுத்து விடவேண்டும். நடவுக்கு பின்னர் 75 – 80 நாளில் முதல் அறுவடையும் அடுத்தடுத்து 45 நாட்களுக்கு ஒரு முறையும் தீவனப் பயிர் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு சராசரியாக 150 முதல் 160 டன்கள் கிடைக்கும்.

 

கம்பு நேப்பியர் - பசுந்தீவன உற்பத்திக்கான முடிவுரை

பெருகி வரும் தீவனப் பற்றாக்குறையை சமாளிக்க, கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்களை, மேற்கண்ட வழிமுறைகளை பின்பற்றி கம்பு நேப்பியர் புல்வகை தீவனத்தை உற்பத்தி செய்து கொடுத்து வந்தால் கால்நடைகளின் தீவனத் தேவையை பூர்த்தி செய்யலாம்.  அதனால் பால், இறைச்சி உற்பத்தி அதிகரிக்கும்.  விவசாயிகள் வளமாக வாழ வழி வகுக்கும்.