வாழ்நாள் கல்வி

தீவனக்கம்பு உற்பத்தி

தீவனக்கம்பு

தீவனக்கம்பு உற்பத்தி

Facebook twitter googleplus pinterest LinkedIn


தீவனக்கம்பு உற்பத்திக்கான முன்னுரை

தீவன தானிய உற்பத்தியில் தீவனக்கம்பு உற்பத்தி முக்கியமானது. இந்த தீவனகம்பு உற்பத்திக்கு ஏற்றரகம் கோ-8 ஆகும். இந்தத் தீவனத்தில்  மாடுகளின் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகையான சத்துக்களும் உள்ளது.  இது வடிகால் வசதியுள்ள எல்லா வகை மண்ணிலும் வளரக் கூடியது. இறவையில் வருடம் முழுவதும் மற்றும் மானாவாரியிலும் பயிரிடலாம்.

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான நிலம் தயார்படுத்துதல் மற்றும் அடியுரம்

நிலத்தை இரும்பு கலப்பை கொண்டு ஒரு முறையும், நாட்டு கலப்பை கொண்டு இருமுறையும் உழுது பக்குவப்படுத்தி பார் அமைக்க வேண்டும். அடியுரமாக கடைசி உழவில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் போட்டு உழுக வேண்டும். தழை, மணி, சாம்பல் சத்துகள் ஏக்கருக்கு முறையே 10:8:6 கிலோ வீதம் இட்டு பார் அமைக்க வேண்டும். மேலுரமாக ஏக்கருக்கு 10கிலோ தழைச்சத்தை விதைத்த 30-வது நாளில் போடவேண்டும்.

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான விதை அளவு மற்றும் விதைநேர்த்தி

ஒரு ஏக்கருக்கு 4 கிலோ வரை விதைக்கலாம். விதை நேர்த்தி, விதைப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் விதைகளை பூஞ்சாணக் கொல்லி மருந்துகளை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான பயிருக்கான இடைவெளி மற்றும் நீர் மேலாண்மை

நடவு செய்யும் போது 25X10 செ.மீ இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும்.  நட்டவுடன் தண்ணீரும் அடுத்த மூன்றாவது நாளில்  உயிர் நீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின் 10 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும்.

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான களை நிர்வாகம் பயிர் பாதுகாப்பு மற்றும் அறுவடை

விதைத்த 30-வது நாளில் ஒரு களை எடுக்க வேண்டும்.  பொதுவாக தீவனக்கம்பு பயிருக்கு பயிர்பாதுகாப்பு எதுவும் தேவையில்லை. விதைத்த 40-45 நாட்களில் தீவனக் கம்பு அறுவடை செய்யலாம். 

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான தீவன மகசூல்

ஏக்கருக்கு 12 டன் வரை மகசூல் கிடைக்கும். இந்த தீவனத்தை பூ பூத்து பால்பிடிக்கும் சமயம் பார்த்து அறுவடை செய்து மாடுகளுக்கு கொடுக்க வேண்டும். தீவனக் கம்பை தீவனதட்டைப் பயிறு கோ-5 அல்லது எஃப் சி 8 –யை கலப்பு பயிராக பயிர் செய்தால் சத்துள்ள தீவனத்தை பெறலாம்.

 

தீவனக்கம்பு உற்பத்திக்கான தீவனக்கம்பு பண்புகள்

இந்தக் கம்பு இரகம் உயரமாக வளர்வதோடு, அதிக தூர் விட்டு அதிகத் தாள்களைக் கொண்டு வளரும். இந்த இரகத்தில் அதிகமான புரதச் சத்தும், இனிப்புத் தன்மையும் இருக்கிறது.  இதனால் இதனை கால்நடைகள் விரும்பி உண்ணுகின்றன.  இதில் கொழுப்புச் சத்து, நார்ச்சத்து, மாவுச்சத்து, சாம்பல்சத்து ஆகியவை முறையே

 

தன்மைகள்

அளவு

பசுந்தீவன மகசூல் (டன்/  ஹெக்டேர்)   

30.30

வயது (நாட்கள்)

45

உலர் தீவனம் (%)

18.20

புரதம் (%)   

13.90

கொழுப்பு(%) 

3.10

நார்ச்சத்து(%)

25.50

மாவுச்சத்து(%)     

46.4

சாம்பல் சத்து(%)   

11.10

 

தீவனக் கம்பு உற்பத்திக்கான முடிவுரை

மேற்கண்டவாறு தீவனக் கம்பு உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுத்து வளர்த்து வந்தால், கால்நடைகளும் நல்ல ஆரோக்கியமாக வளரும்.  விவசாயிகளும் நல்ல இலாபம் அடையலாம்.