வாழ்நாள் கல்வி

அசோலா வளர்ப்பு முறைகளும் அதன் பயன்களும்

அசோலா

அசோலா வளர்ப்பு முறைகளும் அதன் பயன்களும்

Facebook twitter googleplus pinterest LinkedIn


அசோலா வளர்ப்பு முறைகளும் அதன் பயன்களுக்கான முன்னுரை

'மாற்றம் வரும் என்பதில் மாற்றமே இல்லை'  என்பது புதுமொழி.  மாற்றங்களை ஏற்றுக்கொண்டு நம் செயல்பாடுகளை அதற்கு தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளவேண்டும்.  அப்பொழுதுதான் எந்த தொழிலிலும் ஒரு நீடித்த நிலைத்த வளர்ச்சியை பெறமுடியும்.  விளை நிலங்களின் பரப்பளவு சுருக்கம் மற்றும் நீர்ப் பற்றாக்குறை ஆகியவற்றால் கால்நடைகளுக்கான பசுந்தீவனப் பற்றாக்குறை அதிகமாகிக் கொண்டே வருகிறது.  இந்தச் சூழலில் கால்நடைகளுக்கு குறைந்த நீரில் அதிக சத்துள்ள ஒரு தீவன வளர்ப்புதான் அசோலா.  இந்தப் பாடத்திட்டத்தில் அசோலாவின் வளர்ப்பு முறைகள் மற்றும் அதன் பயன்கள் பற்றி பார்க்கலாம்.

 

அசோலா உற்பத்தியும் அதன் பயன்பாடுகளும்

அசோலா நீரில் வளரக்கூடிய ஒரு பெரணி வகைத் தாவரமாகும்.  பார்ப்பதற்கு மற்ற நிலத்தில் வாழும் பெரணிச் செடியைப் போல் இல்லாமல், நீர் வாழ்த் தாவரமான பாசிப் போன்று தோற்றமளிக்கும் வகையில் தண்ணீரின் மேற்பரப்பில் சிறியதாக பார்ப்பதற்கு இலை போன்று மிதந்துக் கொண்டிருக்கும்.  இதன் வேர்கள் தண்டின் அடிப்பாகத்தில் காணப்படும்.  இந்த வேர்கள் தண்ணீரில் இருந்து தேவையானச் சத்துக்களை எடுத்து உயிர் வாழ்கிறது.  இலையின் மேற்பரப்பு பச்சையம் தயாரிக்கப் பயன்படுகிறது. இது நீலப்பாசியடன் கூட்டுச் சேர்ந்து வளி மண்டலத்தில் உள்ள தழைச் சத்தைக் கிரகித்து பெருகி வாழ்கிறது.  இது வேகமாக வளரும் தன்மைக் கொண்டதால், கால்நடைகளுக்குத் தீவனமாகவும் மற்றும் நெல் வயல்களுக்கு உரமாகவும் பயன்படுகிறது.

 

அசோலாவின் வகைகள் மற்றும் அதில் உள்ள சத்துக்கள்

அசோலாவில் எட்டு வகைகள் காணப்படுகின்றன. அவை,

1.             அசோலா பலிக்குலாய்ட்ஸ்

2.             அசோலா கரோலியானா

3.             அசோலா மெக்ஸிகானா

4.             அசோலா மைக்ரோபில்லா

5.             அசோலா பின்னேட்டா

6.             அசோலா நிக்கலோட்டிகா

7.             அசோலா ஜப்பானிக்கா

 அசோலாவில் உள்ள சத்துக்கள்

1.             தழைச் சத்து 5 சதவீதமும்

2.             மணிச் சத்து 0.5 சதவீதமும்

3.             சாம்பல் சத்து 2 – 4.5 சதவீதமும்

4.             சாம்பல் சத்து 10 சதவீதமும்

5.             கார்போஹைட்ரேட் 6.5 சதவீதமும்

6.             கால்சியம்

7.             மெக்னீசியம்

8.             மாங்கனீசு

9.             இரும்புச் சத்து

10.           கொழுப்புச் சத்து

11.           சர்க்கரைச் சத்து

12.           பச்சையம்

ஆகிய சத்துக்கள் உள்ளன.

 

பாத்திகளில் அசோலா உற்பத்தி

குறைவான சூரிய வெளிச்சமும், குறைவான நிழல் உள்ள இடமாக தேர்ந்து எடுக்க வேண்டும்.  சமன்படுத்திய இடத்தில் 10-15 செ.மீ. உயரம் வருமாறு பாத்திகள் அமைக்கவேண்டும்.  பாத்தியின் நீள, அகலம் 3:1.5 மீ. என்ற அளவில் இருந்தால் பராமரிப்பது எளிது.  பாத்தியின் அடியில் பழைய உரச்சாக்கு அல்லது பிளாஸ்டிக் பேப்பர் கொண்டு விரிக்கவேண்டும்.  இந்த விரிப்பின் மேல் சில்பாலின் சீட்டை விரிக்கவேண்டும்.  சில்பாலின் சீட் சரியாமல் இருக்க வரப்பின் மேல் செங்கல்களை அடுக்கி வைக்கவேண்டும். பாத்தியில் 10-15 கிலோ நன்கு சலிக்கப்பட்ட வளமான மண்ணை 2 செமீ. உயரத்திற்கு நிரப்பவேண்டும்.  ஒரு சதுர மீட்டருக்கு ஒரு கிலோ உலர்ந்த மாட்டுச் சாணம், ஒரு கிராம் சூப்பர் பாஸ்பேட் இரண்டையும் ஐந்து லிட்டர் நீரில் கரைத்து ஊற்றவேண்டும்.  இந்த உரத்தை வாரம் ஒரு முறை அசோலா பாத்தியில் ஊற்றவேண்டும்.  பூச்சித் தாக்குதல் இல்லாத பாசிகளின் கலப்படம் இல்லாத சுத்தமான அசோலா விதையை சதுரமீட்டருக்கு அரை கிலோ என்ற அளவில் பாத்தியில் தூவ வேண்டும். மழையின்போது அதிக நீரால் அசோலா பாத்தியிலிருந்து அடித்துச் செல்லாமல் இருக்க நீர் வெளியேறுவதற்கு ஒரு துளை இடவேண்டும்.  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அசோலாவின் வளர்ச்சி தடைபடும்போது பாத்தியை  மாற்றியமைக்கவேண்டும்.  அசோலாவை தென்னந்தோப்புகளிலும், வீட்டின் மாடிகளிலும் வளர்க்கலாம்.

 

அசோலா பராமரிப்பு

அசோலா பாத்தியில் நீரின் அளவு 5-7 செ.மீ. வரை இருக்கவேண்டும்.  அசோலாவுக்குத் தேவையான ஊட்டச்சத்துக் கிடைக்க தினமும் பாத்தியில் உள்ள நீரைக் கலக்கிவிட வேண்டும்.  வாரம் ஒருமுறை பாத்தியில் உள்ள 50 விழுக்காடு (பாதி நீர்) புதிய நீரை சேர்க்கவேண்டும். நீரின் கார, அமில நிலை 5-7.5-க்குள் இருக்கவேண்டும்.  அதாவது அதிக அளவு கடினத் தன்மை உள்ள நீராக இருத்தல் கூடாது.

 

அசோலா அறுவடை

அசோலாவை 1 செ.மீ. அளவு துளையுள்ள பிளாஸ்டிக் தட்டைக் கொண்டு அறுவடை செய்யவேண்டும்.  இதுபோல் அரித்து எடுக்கும்போது தண்ணீர் வடிந்துவிடும். அசோலாவை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யவேண்டும்.  அறுவடை செய்த அசோலாவை நெல் வயலுக்கு உரமாகவும் இடலாம். 

 

அசோலா கால்நடைத் தீவனம்

கால்நடைகளுக்கு அசோலாவை பயன்படுத்தும்போது, ஐந்து லிட்டர் தண்ணீரில் அசோலாவை போட்டு சாணத்தின் மணம் போகும் வரை நன்கு கழுவ வேண்டும்.  இப்படி கழுவும்போது அசோலாவின் வேர்கள் பிரிந்து இலை மட்டும் தனியே மிதக்கும்.  மிதக்கும் அசோலாவை சேகரித்து கால்நடைகளுக்குக் கொடுக்கலாம். 

இந்த அசோலாவில் அதிக அளவு சத்துக்களும், வளர்ச்சித் திறனும் இருப்பதால் பின்வரும் அளவுகளில் கால்நடைகளுக்குக் கொடுக்கலாம்.

 

அசோலாவின் பயன்கள்

கால்நடைகள்       

அளவு (நாள் ஒன்றுக்கு)

நன்மைகள்

பால்மாடு           

1.5 – 2 கிலோ

 

அசோலாவை கறவை மாடுகளுக்குக் கொடுக்கும்போது, மாடுகளின் ஆரோக்கியம் வலுப்பெறுகிறது.  ghலின் தரமும் (கொழுப்புச் சத்து) உயருகிறது.  அசோலாவை மற்றத் தீவனங்களோடு சேர்த்துக் கொடுக்கும்போது 15 – 20 சதவீதம் வரை பால் உற்பத்தி அதிகரிக்கும்.  அசோலாவைத் தீவனமாகப் பயன்படுத்தும்போது 20 – 25 சதவீதம் வரை கலப்புத் தீவனத்தைக் குறைத்துக் கொடுக்கலாம்.  இதன் மூலம் அடர்தீவனச் செலவுக் குறையும்.

நாட்டுக்கோழி, கறிக் கோழி மற்றும் முட்டைக் கோழி

20 – 30 கிராம்

 

கோழிகள் அசோலாவை அப்படியேக் கொத்தித் தின்னும்.  இருப்பினும், பிறத் தீவனங்களோடு கலந்துக் கொடுக்கும்போது அதிக சத்துள்ள முட்டை மற்றும் இறைச்சிக் கிடைக்கும்.

ஆடு  

300 – 500 கிராம்

ஆடுகளுக்கு அசோலாவைத் தீவனமாக பயன்படுத்தும்போது 40 சதவீதம் வரை அடர்தீவன செலவைக் குறைக்கலாம்.  அசோலாவைத் தின்னும் ஆடுகளின் நோய் எதிர்ப்புத் திறன் மற்றும் இனப்பெருக்க உற்பத்தித் திறன் அதிகரிக்கும்.  வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்குக் கொடுக்கும்போது ஆடுகளின் எடை மற்றும் பாலின் அளவு அதிகரிக்கும்.

முயல், மீன், காடை

100 கிராம்

அதிக வளர்ச்சி காணப்படும்.

 

அசோலா வளர்ப்பிற்கான முடிவுரை

மேலே கண்ட முறைகளை பின்பற்றி அசோலா உற்பத்தி செய்து கால்நடைகளுக்கு கொடுத்து அதிக பால், இறைச்சி, முட்டை மற்றும் கால்நடைகளுக்கான நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை பெற்று நல்ல இலாபம் அடையலாம். 

அசோலா உற்பத்தி செய்வோம்!!

ஆனந்தமாய் கால்நடைகளை வளர்ப்போம் !!!

அதிக இலாபம் பெறுவோம் !!!!