வாழ்நாள் கல்வி

கால்நடை வளர்ப்பில் பண்ணைப் பதிவேடு பராமரிப்பு

கால்நடை வளர்ப்பில் பண்ணைப் பதிவேடு

கால்நடை வளர்ப்பில் பண்ணைப் பதிவேடு பராமரிப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


கால்நடை வளர்ப்பில் பண்ணைப் பதிவேடு பராமரிப்பிற்கான முன்னுரை

'செய்யும் தொழிலே தெய்வம்;. அதில் திறமையே நமது செல்வம்' என்பது முதுமொழி..  செய்யக்கூடிய எந்தத் தொழிலும் இலாபகரமாக அமைய வரவு, செலவுகள் பற்றிய பதிவேடுகள் மிகவும் அவசியம்.  ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள்.  கால்நடை வளர்ப்பில் இலாபம் உள்ளதா, இல்லையா என்பதைக் கூட சரிவர கவனிக்க முடியாமல் விட்டு விடுகின்றனர். உதாரணமாக மாடு வளர்ப்பில் தீவனத்தின் அளவு பால் உற்பத்தி பற்றித் தோராயமாக கணக்கிடும் விவசாயிகள் அதனை சில காலங்களில் மறந்து விடுகின்றனர். இதனால் இவர்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரிவரக் கணிக்க முடியாமல் போகிறது. இவர்களின் இவ்வித குழப்பங்களைத் தவிர்க்க பதிவேடுகளின் பராமரிப்பு அவசியமாகிறது. பண்ணை பதிவேடுகளைச் சரிவரப் பராமரிப்பதின் மூலம் வரவு செலவுகளைத் துல்லியமாக ஆராய முடியும்.  இந்தப் பாடத் திட்டத்தில் ஒரு ஆட்டுப் பண்ணையில் பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகள் பற்றி காண்போம்.

 

கால்நடை பண்ணைப் பதிவேடுகளின் வகைகள்

ஆட்டுப் பண்ணையில் வைத்து பராமரிக்கப்பட வேண்டிய பதிவேடுகளை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

1.      ஆடு வளர்ப்பு தொழில்சார் பதிவேடுகள்

2.      வரவு, செலவு விபரப் பதிவேடுகள்

 

தொழில்சார் பதிவேடுகள் பராமரிப்பு

கொள்முதல் பதிவேடு : பண்ணை ஆரம்பிக்கும்போது வாங்கிய ஆடுகளின் விலை, நாள், எடை, வாங்கிய இடம், இனம் ஆகியவற்றை பாலின வாரியாக பதிவு செய்யவேண்டும்.  இது பண்ணையின் இலாப நஷ;ட கணக்கு பார்ப்பதற்கு இது ஒரு அடிப்படையான பதிவேடு.

ஆடுகளின் இருப்புப் பதிவேடு : பண்ணையில் உள்ள ஆடுகளின் இருப்பைக் கணக்கிட்டு அறிய இருப்பு பதிவேடு அவசியம்.  இதை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.      பெட்டடைக் குட்டிகள் இருப்புப் பதிவேடு

2.      கிடாய் குட்டிகள் இருப்புப் பதிவேடு

3.      வயது முதிர்ந்த பெட்டை(தாய்) ஆடுகளின் பதிவேடு

4.      கிடாக்களின் பதிவேடு

குட்டிகள் பிறந்தவுடன் அவற்றிற்கு அடையாள எண் கொடுத்து> பாலின வாரியாக பதிவு செய்ய வேண்டும்.  இதில் பிறந்த தேதி> பிறப்பு எடை> தாய் தந்தையின் அடையாள எண்> குட்டிகளின் சிறப்புத் தன்மை(அடையாளம்) ஆகியவை இருக்கவேண்டும்.  இறப்பு மற்றும் விற்பனை செய்ய நேரிடும்போது அதையும் இதில் பதிவு செய்யவேண்டும்.

இனவிருத்தி பதிவேடு: பெட்டை ஆடுகளை இனவிருத்திக்காக அனுமதித்து> பெட்டை  மற்றும் கிடாய் இனச் சேர்க்கை ஏற்படின்> இனவிருத்திப் பதிவேட்டில் பதிந்திட வேண்டும்.  இதில் ஆட்டின் அடையாள எண், பிறந்த தேதி> வயது> இனச்சேர்க்கையான நாள்> இனச்சேர்க்கைக்கு பயன்படுத்திய கிடாயின் விபரம் ஆகியவற்றை பதிவு செய்திடல் வேண்டும்.

பிறப்புப் பதிவேடு : இந்தப் பதிவேட்டில் பிறந்தக் குட்டியின் அடையாள எண்> பிறந்த தேதி> குட்டியின் எடை> சிறப்பு அடையாளம்> தாய்> தந்தையின் விபரங்கள் ஆகியவற்றை பதிந்திட வேண்டும். 

மாதாந்திர எடைப் பதிவேடு : இந்தப் பதிவேட்டில் ஒவ்வொரு மாதமும் குட்டிகள் மற்றும் ஆடுகளின் எடையைப் பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் ஆடுகள் மற்றும் குட்டிகளின் வளர்ச்சியை கண்டறியலாம்.  இந்தப் பதிவேடுகள் பராமரிப்பதின் மூலம்> எடை குறைந்துக் கொண்டே போகும் ஆடுகளை அடையாளம் கண்டு பராமரிப்பு முறைகளை மேற்கொள்ளலாம். மேலும் எடைக் குறைந்துக் கொண்டே போகும் குட்டிகளை பண்ணையில் இருந்து கழித்து விற்றுவிடலாம்.  இதனால் நஷ;டத்தைத் தவிர்க்கலாம்.

பெட்டை ஆடுகளின் உற்பத்தித் திறன் பதிவேடு : இப்பதிவேட்டில் ஆட்டின் அடையாள எண்> பிறந்த தேதி> பிறப்பு எடை> தாய் தந்தைகளின் விபரம்> குட்டிகளுடைய மூன்று மாதம்> ஆறு மாதம்> ஒரு வருட வயதுகளில் எடை ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.  இனச் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட நாள்> கிடாயின் விபரம்> குட்டி ஈன்ற நாள்> ஈன்ற குட்டி மற்றும்; தாயின் எடை> பாலினம் ஆகிய விபரங்களை ஒவ்வொரு ஈத்துக்கும் பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் ஒரு பெட்டை ஆட்டின் உற்பத்தி திறன் எவ்வாறு உள்ளது என்பதை அறியலாம். குட்டி ஈனாத ஆடுகளை அடையாளம் கண்டு விற்றுவிடலாம்.

தீவனப் பதிவேடு : இந்தப் பதிவேட்டில் ஆடுகள், குட்டிகள், கிடாய்கள் வாரியாக அன்றாடம் கொடுக்கக்கூடிய தீவனங்கள், கொடுக்கும் முறை ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் தீவனம் விரயமாவதைத்  தவிர்க்கலாம்.

தடுப்பூசிப் பதிவேடு : இந்தப் பதிவேட்டில் தடுப்பூசிகள் பற்றிய அட்டவணையும் ஆடுகள், குட்டிகள் மற்றும் கிடாய்களுக்கு போட்ட தடுப்பூசியின் பெயர், நாள், தடுப்பூசி உற்பத்தி செய்யப்பட்ட நாள், எண் ஆகியவற்றையும் பதிவு செய்யவேண்டும்.  இந்தத் தடுப்பூசியால் பின் விளைவுகள் ஏதாவது ஏற்பட்டால் அதை கண்டுபிடிக்க உதவும்.  ஆடுகளுக்கு குறிப்பிட்ட காலங்களில் கொடுக்கப்படவேண்டிய தடுப்பூசிப் பற்றி கண்டறியலாம்.

குடற்புழு நீக்கப் பதிவேடு : மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கவேண்டும்.  அதனால் இந்தப் பதிவேட்டில் ஆடுகளுக்கு கொடுத்த குடற்புழு நீக்க மருந்தின் பெயர், கொடுக்கப்பட்ட நாள்,  மருந்து உற்பத்தி செய்த  நாள், குடற்புழு நீக்கத்தினால் ஏற்பட்ட விளைவுகள் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.  இதில் மூலிகை மருந்துகளை கொடுத்தாலும் அதன் பெயர் மற்றும் அளவுகளையும் பதிவு செய்யவேண்டும். அடுத்த முறை மருந்து கொடுக்கும் காலத்தை அறியலாம்.  குடற்புழு நீக்க மருந்து கொடுக்கும்போது ஒவ்வொரு முறையும் மருந்தை மாற்றி, மாற்றி கொடுக்கவேண்டும்.

இறப்புப் பதிவேடு : பண்ணையில் ஆடு மற்றும் குட்டிகள் இறக்க நேரிடின் இறந்த ஆட்டின் எண், பாலினம், பிறந்த நாள், வயது, இறப்பிற்கான காரணம் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் இறப்புக்கான காரணத்தை அறிந்து, மீண்டும் அதுமாதிரியான தவறுகள் நிகழாமல் தவிர்க்கலாம்.

கழிவுப் பதிவேடு : ஆடுகளை பண்ணையிலிருந்து கழிக்கும்போது, ஆடுகளின் விபரங்களை பாலின வாரியாக அதற்கான காரணத்துடன் பதிவு செய்யவேண்டும்.  இது பண்ணையின் வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும். 

விற்பனை பதிவேடு : பண்ணையில் இருந்து விற்கப்படும் ஆடுகளை பற்றிய அனைத்து விபரங்களும் இருக்கவேண்டும்.   விற்பனைக்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும்.

நோய்க் கிளர்ச்சிப் பதிவேடு : பண்ணையில் திடீரென்று ஏதாவது தொற்றுநோய் ஏற்படின் அதன் விபரங்களையும்> அதனைக் கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள்> இதனால் இழப்பு ஏற்பட்ட காலம்> பாதிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை> வயது போன்றவற்றை பதிவு செய்யவேண்டும்.  இந்தப் பதிவின் மூலம் பிற்காலங்களில் பண்ணைகளில் உரிய நடவடிக்கை எடுத்து ஏற்படப்போகும் இழப்பைத் தடுக்கலாம்.

சிகிச்சைப் பதிவேடு : பண்ணையில் நோய்வாய்ப்பட்ட ஆடுகளுக்கு கொடுக்கப்படுமம் சிகிச்சையினை இந்தப் பதிவேட்டில் பதியவேண்டும்.  இதன்மூலம் பின்வரும் காலங்களில் ஆடுகளின் உடல் ஆரோக்கியத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்க இயலும்.

மருத்துவப் பொருட்கள் பதிவேடு : ஆடுகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்துகளை முறையாக பதிவு செய்து அதனுடைய காலாவதியாகும் நாட்களையும் பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் தேவையில்லாத மருந்துகள் வாங்குவதைத் தவிர்க்கலாம்.  காலாவதியாவதற்கு முன்பு மருந்துகளை பயன்படுத்த முடியும்.

 

வரவு, செலவு விபரப் பதிவேடு பராமரிப்பு

வரவு பதிவேடு : இந்த பதிவேட்டில் ஆடுகள் மற்றும் விற்பனை மூலம் வரும் வருமானம், கம்பளம், பால், எரு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் முறையாக பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் ஒரு ஆண்டின் வருமானம் எவ்வளவு என்பதைக் கணக்கிடலாம்.

செலவினப் பதிவேடு :

செலவின வகைப் பதிவேட்டை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 

1.      அன்றாட செலவினப் பதிவேடு

2.      நிரந்தர செலவினப் பதிவேடு

அன்றாட செலவினப் பதிவேடு : இதில் அன்றாட செலவினங்களான மருந்து மற்றும் மருத்துவர் செலவு, தீவனச் செலவு, மின்சாரச் செலவு, கொட்டகை பராமரிப்பு, போக்குவரத்துச் செலவு, இன்னபிற செலவினங்களையும் முறையாக பதிவு செய்யவேண்டும்.  இதன் மூலம் பண்ணையில் ஒரு வருடத்திற்கு ஆகும் செலவுகளை கணக்கிட்டு, செலவுகளை குறைப்பதற்கான வழிகளை ஆராயாலாம்.

நிரந்தர செலவினப் பதிவேடு : ஆடுகள் வாங்க முதலீடு செய்தல், கொட்டகை அமைத்தல், தீவனத் தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி அமைத்தல், பிற உபகரணங்கள் வாங்குதல் ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும்.

இந்த வரவு, செலவுப் பதிவேடுகளை பராமரிப்பதின் மூலம் வரவும், செலவும் சரியாக உள்ளனவா அல்லது எது குறைவு, எது அதிகம் என்பதை ஆராய்ந்து செலவைக் குறைத்து வருமானத்தை கூட்டுவதற்கு வழி செய்யும்.

 

கால்நடை வளர்ப்பில் பண்ணைப் பதிவேடு பராமரிப்புக்கான முடிவுரை

ஒரு ஆட்டுப் பண்ணையில் முறையாக பராமரிக்கக்கூடிய பதிவேடுகள் பண்ணையின் கண்ணாடி ஆகும்.  ஓவ்வொரு ஆண்டின் ஆரம்பத்தில் பண்ணையில்; குட்டிகள், ஆடுகள், கிடாக்கள், கட்டிடம், இதர உபகரணங்களை வரிசைப்படுத்தி அவைகளுக்கான பண மதிப்பை நிர்ணயம் செய்து முந்தைய ஆண்டின் வருமானத்தோடு ஒப்பிட முடியும்.  கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு வருவானம் அதிகரித்துள்ளதா அல்லது குறைந்துள்ளதா என்பதை இப்பதிவேடுகள் காட்டும்.  தவறு இருந்தால் தவறு உள்ள இடத்தைக் கண்டறிந்து நல்ல இலாபகரமான பண்ணையை உருவாக்க வழிவகுக்கும்