வாழ்நாள் கல்வி

கிராமக் கறிக் கடையின் அமைப்பு

கிராமக் கறிக் கடை

கிராமக் கறிக் கடையின் அமைப்பு

Facebook twitter googleplus pinterest LinkedIn


கறிக்கடை அமைப்பிற்கான முன்னுரை :

சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் என்பது போல, ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்ய அது அமைந்திருக்கும் இடம் தரமாகவும், அனைவருக்கும் போக்குவரத்திற்கு ஏற்றதாக இருந்தால் நல்லது.  அந்த இடம் சுத்தமாகவும், உறுதியான அமைப்பைக் கொண்டதாகவும் இருக்கவேண்டும்.  ஒரு கடையின் அமைப்பு, அது அமைந்திருக்கும் சூழலை வைத்துதான் அந்தக் கடையின் தரத்தை மதிப்பிடுவர். இந்தப் பாடத்திட்டத்தில் ஒரு கிராமக் கறிக்கடையின் அமைப்பைப் பற்றி காண்போம்.

 

கறிக்கடையின் உள் அமைப்பு

ஒரு கறிக் கடையில் அதன் தரை நீரை உறிஞ்சுவதாக இல்லாமல் கெட்டியானத் தரையாக இருக்கவேண்டும்.  சுவரில் மூன்று மீட்டர் உயரத்திற்கு டைல்ஸ் கற்கள் பதிக்கவேண்டும்.  சுவரின் மூலைகள் வளைவாக இருக்கவேண்டும். அப்பொழுதுதான் அதை சுத்தம் செய்வதற்கு வசதியாக இருக்கும். கதவுகள் இருபுறமும் திறப்பதுபோல் இருக்கவேண்டும்.  தேவையான அளவு வெந்நீர் மற்றும்  தண்ணீர் குழாய்கள் இருக்கவேண்டும்.  தண்ணீர் குழாய்கள் கைமுட்டி அல்லது கால்முட்டி கொண்டு திறப்பதாக இருக்க வேண்டும்.  தரை மற்றும் சுவர் பகுதிகள் எளிதில் சுத்தம் செய்யக்கூடியதாய் இருக்கவேண்டும்.  கடையின் கழிவு நீர் விரைவாக வெளியேறும் விதத்தில் அமைந்திருக்க வேண்டும்.  கறியை சுத்தம் செய்வதற்கு 80 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் வெந்நீர் குழாய் இருக்கவேண்டும்.  தூசி, கெட்ட வாசனை, புழுப் பூச்சிகள், பறவைகள் உள்ளே வராதவாறு கண்ணாடிக் கதவுகள் அமைக்கவேண்டும்.  வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு நாற்;காலிகள் இருக்கவேண்டும்.  குறைந்த அளவு வெளிச்சம் உள்ள மின் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.  கறிக்கடையைச் சுற்றி குப்பைக் கூளங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.  கறிக்கடையின் கழிவுகளை முறையாக அகற்றி சுத்தப்படுத்த வேண்டும். 

 

கறிக்கடையின் பணியாளர்கள்

பணியாளர்களுக்கு சுத்தமான ஆடைகள், கையுறைகள், தலையுறைகள் கொடுக்க வேண்டும். பணியாளர்களுக்கு கொடுக்கும் ஆடைகள் அடர் பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது. பணி முடிந்தவுடன் ஓய்வு எடுக்க ஓய்வு அறைகள் இருக்கவேண்டும். 

 

கறிக்கடையில் உள்ள பொருட்கள் - தூய்மை

கடையின் உட்பக்கத்தில் ஆடுகளின் உடலகத்தை தொங்கவிடும் தண்டவாளங்கள் துரு இல்லாதவாறு இருக்கவேண்டும். கத்திகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், டிரே ஆகியவை சுத்தமாக இருக்கவேண்டும்.  ஒவ்வொரு நாளும் கிருமி நாசினிக் கொண்டு கழுவி வைக்கவேண்டும்.  கறிக்கடையின் கதாநாயகனே வெட்டுக்கட்டைதான்.  இந்த வெட்டுக் கட்டை பிளவு, பிசிறு இல்லாமல் இருக்கவேண்டும்.  ஒவ்வொரு நாளும் கல் உப்புக் கொண்டு நன்கு தேய்த்துக் கழுவி வைக்கவேண்டும்.  அப்படி செய்யும்பொழுது அழுக்கு, பிசிறு, கொழுப்பு, கறித்துகள்கள் இல்லாமல் பளிச்சென்று இருக்கும். நுண்ணுயிரிகளின் தாக்கம் இல்லாமல் இருக்கும். 

 

கறியைப் பாதுகாத்தல் மற்றும் பதப்படுத்துதல்

வெட்டியக் கறியை பாதுகாப்பாக வைக்க பதப்படுத்தும் பெட்டி இருக்கவேண்டும்.  இந்தக் கறியை பதப்படுத்தி பாதுகாத்து வாடிக்கையாளர் விரும்பும் பகுதியை வெட்டி கொடுக்கலாம்.  கடையில் உள்ள தண்ணீர் குழாய் மற்றும் கழிவு நீர் குழாய் வடிகால் வசதியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

கிராமக் கறிக்கடை அமைப்பிற்கான முடிவுரை

இப்பாடத்திட்டத்தில் கண்டுள்ளபடி கறிக் கடையின் அமைப்பு இருக்குமேயானால் சுத்தமான, தரமான கறியை உற்பத்தி செய்ய முடியும்.  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கைக்கூடும்.  தொழில் செய்பவர்களுக்கு நல்ல இலாபம் கிடைக்கும்.