வாழ்நாள் கல்வி

மேய்ச்சலில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை

மேய்ச்சலில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை

மேய்ச்சலில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை

Facebook twitter googleplus pinterest LinkedIn


மேய்ச்சலில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை முன்னுரை

இந்திய பொருளாதாரத்தில் 30 சதவீதம் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கிறது.  மாடு வளர்ப்பில் 50 சதவீதம் மேய்;ச்சல் மூலமே பராமரிக்கப்படுகிறது.  கால்நடைகளுக்குத் தேவையான தீவனப் பயிர்கள் 5 சதவீத நிலப்பரப்பில்தான் பயிரிடப்படுகிறது.  தீவன பற்றாக்குறையைப் போக்க மேய்ச்சல் முறை பின்பற்றப்படுகிறது.  இந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கப்படும் பால்மாடுகளுக்கு கொடுக்க வேண்டிய தீவன மேலாண்மை பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் காண்போம்.

 

நம் நாட்டில் மேய்ச்சல் தரையின் அமைப்பு

நமது நாட்டில் மேய்ச்சல் நிலம் பிற நாடுகளில் இருப்பது போல அல்லாமல் இயற்கையான மேய்ச்சல் நிலமாக இருக்கிறது.  இதனால் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்கு மேய்ச்சல் கிடைப்பதில்லை.  பருவ மழைக்கு பின் வரும் காலங்களில் புல் வகைகள் ஓரளவு வளர்ந்து கறவைமாடுகளின் தீவனத் தேவை ஓரளவு பூர்த்தி செய்யப்படுகிறது. பிற மாதங்களில் மழையின்றி புல்வளம் குறைந்து காணப்படுவதால் சத்து குறைவான தீவனமே மேய்ச்சல் மூலம் கிடைக்கிறது.

 

மேய்ச்சல் மூலம் கறவை மாடுகளுக்கு கிடைக்கும் ஊட்டச் சத்துக்கள்

புல்வளம் குறைந்துக் காணப்படும் மேய்ச்சல் நிலங்களில் கறவைமாடுகள் தொடர்ந்து மேய்வதாலும், ஒரே இடத்தில் அதிக எண்ணிக்கையுள்ள கறவைமாடுகள் மேய்வதாலும், கறவைமாடுகளின் புரதத் தேவையில் 50 சதவீதத்திற்கும் குறைவான புரதச் சத்துதான் கிடைக்கிறது.  இதனால் 50 சதவீதத்திற்கும் மேலான ஊட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படுகிறது.  அதிக அளவில் பசும்புல் வளர்ந்து காணப்படும் மேய்ச்சல் தரையில் மேயும் கறவை மாடுகள் தனது தீவனத் தேவையில் 60 சதவீதம் வரை பெற்றுக்கொள்கிறது.

 

மேய்ச்சல் மூலம் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கு தேவையான தீவனம்

கறவை மாடுகள் மேய்ச்சலில் இருந்தாலும் அவற்றின் முழு தீவனத் தேவை பூர்த்தியடைவதில்லை.   தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய அடர்தீவனம் அவசியம் தேவைப்படுகிறது.  ஏனென்றால் கறவைமாடுகளுக்கு மேய்ச்சல் மூலம் உடலுக்குத் தேவையான எரிசக்தி மற்றும் புரதசத்து போன்ற சத்துக்கள் போதுமான அளவு கிடைப்பதில்லை. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையைப் போக்க அடர்தீவனம் அவசியம் கொடுக்கப்படவேண்டும்.  கிராமப்புறங்களில் குறைந்த அளவு பால் கொடுக்கும் கறவைமாடுகளுக்கு மேய்ச்சலுடன் வைக்கோல் போன்ற உலர் தீவனங்களை மட்டுமே கொடுக்கின்றனர். இதனால் மாடுகளுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காததால் உற்பத்திக் குறைவு, கருவுறுதலில் தாமதம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.  எனவே, கறவைமாடுகளின் உணவுத் தேவையை கருத்தில் கொண்டு தீவனம் அளித்தல் வேண்டும்.

 

எரிசக்தி தீவனங்கள்

மேய்ச்சல் மூலம் பராமரிக்கப்படும் கறவைமாடுகளுக்கு அவைகளின் எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய போதுமான அளவு பசுந்தீவனம் அளிக்கவேண்டும்.  தீவனச் சோளம், மக்காச்சோளம் அல்லது வீரிய வகை புல் வகைகளான கோ-3> கோ-4> போன்ற தீவனங்களை மாடுகளுக்கு தினசரி 10 முதல் 15 கிலோ வரை அளிக்கலாம்.  புல் வகைகளை வீட்டின் பின்புறம் அல்லது கொட்டகையின் பின்புறம் வளர்த்து ஓரளவு பசுந்தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.  புன்செய் நிலங்களில் விளையும் சோளம், கம்பு போன்ற தானியப் பயிர்களை தனியாகவோ அல்லது பிற தீவனங்களுடன் இணைத்தோ கொடுத்தால் எரிசக்தித் தேவையை பூர்த்தி செய்வதுடன் பால் அளவு குறையாமல் பெறலாம்.

 

புரதச்சத்துத் தீவனங்கள்

அதிக பால் கொடுக்கும் கறவைமாடுகளுக்கு எரிசக்தியுடன் புரதச் சத்தும் அதிகம் தேவைப்படுகிறது.  இந்தப் புரதசத்து பயறு வகை தீவனங்களான காராமணி. சனப்பை, கொத்தவரை போன்ற தீவனங்களில் அதிகம் உள்ளது.  ஆகவே இவற்றை பசும்புல்லுடன் சேர்த்துக் கொடுக்கலாம்.  புரதத் தேவையை பூர்த்தி செய்ய மர இலைகளை பசுந்தீவனமாக கறவைமாடுகளுக்குக் கொடுக்கலாம்.  இவைகளில் 60-70 விழுக்காடு குடலில் சென்று செரிமானமாகும் புரதம் இருக்கிறது. இந்த வகையான புரதம் அதிக அளவில் கறவைமாடுகளுக்கு தேவைப்படுவதால் மர இலைகளை பசும்புல்லுடன் கலந்து தீவனமாக கொடுக்கலாம். மர இலைகளை தீவனமாக கொடுக்கும்போது பல்வேறு வகையான மர இலைகளை கலந்து அளித்தல் நல்லது.  அகத்தி, சவுண்டல், கிளரிசிடியா போன்ற மர இலைகளை கலந்துக் கொடுக்கலாம்.

 

நோய் எதிர்ப்புச் சக்தி தீவனம்

கோடையில் தீவனப் பற்றாக்குறை உள்ளபோது சவுண்டல், கிளரிசிடியா போன்ற மர இலைகளை காயவைத்து பொடி செய்து ஒவ்வொரு கிலோ அடர்தீவனத்துடன் 250 கிராம் என்ற அளவில் கொடுக்கலாம்.  வாடிய வேப்பிலை, உசிலை இலைகளை பொடி செய்து தீவனத்துடன் கலந்துக் கொடுக்கும்போது மாடுகளுக்கு நோய் எதிர்ப்புத் திறன் கூடும்.

 

வேளாண் உப பொருட்கள் அல்லது கழிவுப் பொருட்கள்

விளை நிலங்களில் கிடைக்கும் வைக்கோல், சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றின் தட்டைகள், வேர்க்கடலைக்  கொடி, காய்ந்த புற்கள் ஆகியவற்றை முறையாக பதப்படுத்தி கால்நடைத் தீவனத் தேவையைப் பூர்த்தி செய்யலாம்.  இவைகளில் குறைந்த அளவு சத்துக்களும், அதிக அளவு நார்ச் சத்துக்களும் உள்ளதால் இவைகளை ஓரளவுதான் தீவனமாக பயன்படுத்தமுடியும்.  கரும்பு சோகையில் 5-6 விழுக்காடு புரதம் இருப்பதால் இதையும் பசுந்தீவனமாக பயன்படுத்தலாம்.  கரும்பு சோகை அதிகமாக கிடைக்கும் காலங்களில் சைலேஜ்(ஊறுகாய் புல்) தயார் செய்து அதை நான்கு முதல் ஐந்து கிலோ என்ற அளவில் இரண்டு கிலோ பிண்ணாக்குடன் கலந்துத் தீவனமாகக் கொடுக்கலாம்.  சூரியகாந்தி அறுவடைக்குப் பின்னர் செடி, விதை நீக்கிய பூ போன்றவற்றை சிறுசிறு துண்டுகளாக்கி அதில் 50 சதவீதம், பிண்ணாக்கு 20 சதவீதம், அரிசித் தவிடு 20 சதவீதம், சர்க்கரை பாகு கழிவு 9 சதவீதம், யூரிய 0.5 சதவீதமும், தாதுப்பு 1 சதவீதம், உப்பு 0.5 சதவீதம் என்ற அளவில் கலந்து கறவைமாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கலாம்.  இதன் மூலம் 25 சதவீதம் வரை தீவனச் செலவுக் குறையும்.

 

குடிநீர் தேவை

மேய்;ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு போதுமான அளவு குடிநீர் அளிப்பது குறைவாக உள்ளது.  கால்நடைகளின் வயது, உடல் நிலை, உண்ணும் உணவு, மேய்ச்சலில் கிடைக்கும் தீவனம், மேயும் நேரம் மற்றும் உற்பத்தித் திறன் ஆகியவற்றைப் பொறுத்து கால்நடைகளின் குடிநீர் தேவை மாறுபடுகிறது.  கறவைமாடுகளுக்கு குடிநீர் தேவை மிக அதிக அளவில் உள்ளது.  கால்நடைகளுக்குத் தேவையான குடிநீர் வழங்கவில்லை என்றால் அவைகளின் செரிமானத் தன்மை பாதிக்கப்டுகின்றது.  மேய்ச்சலுக்கு செல்லும் மாடுகளுக்கு வெப்பத்தினால் உடலில் உள்ள நீர்ச்சத்து அதிகமாக வெளியேற்றப்படுவதால் அவைகளின் நீர் தேவை அதிகமாகிறது.  பால் மாடுகளுக்கு ஒரு நாளைக்கு 40-45 லிட்டர் நீரும், பால் உற்பத்திக்கு 3-4 லிட்டர் தண்ணீர் அதிகமாக கொடுக்கவேண்டும். கொடுக்கும் நீர் சுத்தமானதாகவும், நன்னீராகவும் இருக்கவேண்டும்.

 

மேய்ச்சலில் பராமரிக்கப்படும் கறவை மாடுகளுக்கான தீவன மேலாண்மை முடிவுரை

மேய்ச்சல் மூலம் பராமரிக்கப்படும் கால்நடைகளுக்கு ஏற்படும் சத்துப் பற்றாக்குறைகளை போக்க இந்தப் பாடத்திட்டத்தில் கூறப்பட்டுள்ள தீவன பராமரிப்பு முறைகளை பயன்படுத்தி, கறவைமாடுகளின் பால் உற்பத்தி குறையாமல் கவனிக்கவேண்டியது நமது கடமை.