தீவன மக்காச்சோளம் உற்பத்தி
தீவன மக்காச்சோளம் உற்பத்திக்கான முன்னுரை
பசுந்தீவன பயிர் உற்பத்தியில் இன்று முன்னணியில் இருப்பது தீவன மக்காச்சோளம். அதிகமாக பயிரிடப்படும் இரகங்களில் ஆப்பிரிக்கன் நெட்டை இரகம் மிகவும் சிறந்தது. இறவை பயிருக்கு ஏற்ற ரகம் ஆகும். ஆப்பிரிக்கன் நெட்டை, கங்கா இந்த இரண்டு இரகங்கள் எட்டு அடி உயரம் வரை வளரும். இந்த தீவன மக்காச்சோளம் உற்பத்தி பற்றி இந்தப் பாடத்திட்டத்தில் நாம் பார்க்கலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு இருமுறையும், நாட்டுக் கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவு செய்ய வேண்டும்.
அடியுரம்
தொழு உரம் ஏக்கருக்கு 10 டன், 10 பாக்கெட் அசோஸ் பைரில்லம் (2000கிராம்) மற்றும் 10 பாக்கெட் பாஸ்போபாக்டீரியா (2000 கிராம்) அல்லது 20 பாக்கெட் அசோபாஸ் (4000 கிராம்) ஆகியவற்றை உழும் போது வயலில் இட்டு உழவேண்டும். மண் பரிசோதனை செய்து உற்பத்தி செய்தால் சிறப்பாக இருக்கும். மண்பரிசோதனை செய்யவில்லை யெனில் ஏக்கருக்கு அடி உரமாக தழை மணி மற்றும் சாம்பல் சத்து 12:15:6 என்ற அளவில் விதைத்த 30-வது நாளில் ஏக்கருக்கு 12 கிலோ தழைச்சத்தை போடவேண்டும்.
விதை அளவு
ஏக்கருக்கு 10 கிலோ வரை விதைத் தேவைப்படும். பயிர் இடைவெளி – 30செ.மீ அளவில் பார் அமைத்து செடிக்குசெடி 15செ.மீ இடைவெளியில் நடவேண்டும்.
விதை நேர்த்தி
விதைப்பதற்கு முன் அசோஸ் பைரில்லம் மூன்று பாக்கெட்டுகள் (ஏக்கருக்கு 250 கிராம்) உயிர் உரத்தை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். அதற்குபின் மூன்றாவது நாளில் உயிர் நீர்ப் பாய்ச்ச வேண்டும். அடுத்து 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர்ப் பாய்ச்சினால் போதுமானது.
களை நிர்வாகம்
நட்ட 20-வது நாளில் முதல் களை எடுக்க வேண்டும். அடுத்து களை இருந்தால் இரண்டாவது களை எடுக்கவும்.
அறுவடை
தீவன மக்காச்சோளம் கதிர் பால் கட்டும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். மகசூல் ஏக்கருக்கு 16 முதல் 20 டன்கள் வரை கிடைக்கும். தீவன மக்காச்சோளத்தை தீவனத் தட்டை பயிறு கோ-5 அல்லது கோ(எஃப்சி) 8 உடன் 3:1 என்ற விகிதத்தில் பயிரிடுவதன் மூலம் சத்துள்ள தீவனத்தை பெறலாம்.
தீவனமக்காச்சோளம் உற்பத்திக்கான முடிவுரை
மேலே கூறிய சாகுபடி முறைகளை பின்பற்றி தீவன மக்காச்சோளம் உற்பத்தி செய்து மாடுகளுக்கு கொடுத்து வளர்க்கலாம். அதிகமான மகசூல் இருக்கும் பட்சத்தில் அதை விற்பனை செய்தும் பயன்பெறலாம்.